”இருபது” அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார் விக்ரமபாஹு (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

சிங்களவர்களை ஏமாற்றியதன் ஊடாக, தற்போதைய அரசாங்கம் மிகப்பெரிய பலத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள, சிரேஷ்ட இடதுசாரித் தலைவர், அரசாங்கம் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் இல்லாமல் செய்யப்படுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வது கிராமப்புற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு பல நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

“17ஆவது திருத்தம் மற்றும் 13ஆவது திருத்தம் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இழக்கப்படும்போது, அது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உரிமைகள் அழிக்கப்படும். இந்த மக்களுக்கு எதிரான மிகப்பெரிய மோசடி இதுவாகும். மாகாண சபைகள் மூலம்தான் சிங்களவர்களில் ஏராளமான மக்கள் நல்ல நிலைமைக்கு வந்தார்கள்.”

நேற்றைய தினம் (08) சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இராஜகிரியவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தரின் போதனைகளை கூறிக்கொண்டு தற்போதைய அரசாங்கம் பல்வேறு விடயங்களை செய்வதற்கு முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அப்பாவி பௌத்த, சிங்கள மக்களை ஏமாற்றி அச்சுறுத்துவதன் மூலம், அவர்களை கோபத்திற்கும் வெறுப்பிற்கும் இட்டுச் செல்வதன் மூலம், இரக்கம், கருணை, பரிவான களிப்பு, அமைதி ஆகியவற்றை பரப்புவதற்கு பதிலாக, வெறுப்பு, துவேசம், குரோதம் ஆகியவற்றை பரப்பி, தமிழ் முஸ்லீம் மக்களை அச்சுறுத்துகின்றனர்.”

தற்போதைய சூழலில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேராசிரியர் விக்ரமாபாஹு கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார். .

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலை தடுக்கவும் இணைந்து செயற்படுமாறு அனைத்து ஜனநாயக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் பாலித லிஹினியகுமார அழைப்பு விடுத்துள்ளார்.

Facebook Comments