கொரோனா தொற்று நோய் காலப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் தூண்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் பேஸ்புக் ஊடாக முஸ்லீம் விரோத வெறுப்புணர்வை தூண்டிய விடயத்தில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பேஸ்புக் முழுவதும் பரந்துபட்ட வகையில் வதந்திகள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையை உலுக்கிய கொடிய இனவாத தாக்குதலில் தமது பங்களிப்பு குறித்து பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல் தெனிய ஆகிய பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளின் போது சமூக வலைத்தளங்கள் ஊடாக முஸ்லீம் விரோத வெறுப்புணர்வு பேச்சுகள் பரப்பட்டதுடன், அதனை முகாமைத்துவம் செய்யும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அரசாங்கம் பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தற்காலிக தடைவிதித்திருந்தது.
பேஸ்புக் மூலம் பரிமாறப்பட்ட மூர்க்கத்தமான செய்திகள், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பங்களிப்பு செய்திருக்கலாம் என இந்த சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தமது சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைவதாக மே மாதம் 12 ஆம் திகதி பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, மனித உரிமைகளில் உண்மையான தாக்கம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள பேஸ்புக், அதற்கான மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் – எந்தவொரு அறிக்கையும் இல்லை
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கலாநிதி அஹமட் ஷாஹீட், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் சமர்ப்பித்த ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கையில் தாக்குதல் தொடர்பில் குறிப்பிடும் போது, மூன்று நாட்கள் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 400 ற்கும் அதிகமான சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட போதிலும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக முஸ்லீம் மக்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசாரணை அறிக்கையை ஆதாரங்களுடன் வெளியிடத் தவறியுள்ளது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் திகதி இரவு முதல் கண்டியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அதே ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக்கா உடுகமகே மற்றும் ஏனைய ஆணையாளர்களின் தலைமையில் கண்டியில் இடம்பெற்ற சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதுடன், அதே ஆண்டு ஜுலை மாதம் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருந்தார்.
விசாரணை நடவடிக்கைகளுக்காக ஆணையாளர்களான ஹசாலி உசேன், விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி, சட்டத்தரணி ஏ.டபிள்யூ.எம்.அஹமட், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமுதினி வித்தாரண மற்றும் சட்ட அதிகாரி பிரதீபா வீரவிக்ரம ஆகியோர் ஆணைக்குழுவின் தலைவருக்கு உதவி வழங்கியிருந்தனர்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியிருந்த அரசாங்கம், கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள கடும்போக்குவாதிகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கியதாக அரசாங்க அமைச்சர்கள் விமர்சனம் முன்வைத்திருந்தனர்.
அத்துடன் ஆயுதமேந்திய விசேட அதிரடிப் படையினர் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காணொளிகளும் வெளியாகியிருந்தன.
ஓப்லைய்ன் வன்முறை
திகண மோதலின் போது பேஸ்புக்கில் வெளியான வதந்திகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்கள், ஒப் லைய்ன் வன்முறைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என பேஸ்புக்கின் விசாரணைக்கென நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழப்ப நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் அவ்வாறான பதிவுகளை நீக்குவதற்கு பேஸ்புக் தவறிய நிலையில், அதன் சமூக வலைத்தளத்தில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் வேறு வகையிலான துன்புறுத்தல்களும் தொடர்ந்தும் பரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முதல் பகுதியில் மேலும் குறிப்பிடப்பட்டதற்கு அமைய, 2009 ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு குறித்து அந்த நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு சிவில் சமூக ஸ்தாபனமொன்று முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பல்வேறு குழுக்கள் தமது தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்கு பேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ள அதேவேளை இந்த வன்முறையின் பின்னணியில் இருக்கும் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சிங்கள மொழியை கொண்டவர்களின் பதிவுகளை மீளாய்வு செய்வதற்கு இருவர் மாத்திரமே வளவாளர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் நாளாந்தம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44 இலட்சமாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மனித உரிமைகளப் பாதுகாக்கும் பொருட்டு, தமது நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்தோனேஷியா மற்றும் கம்போடிய ஆகிய நாடுகளை குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இந்த அறிக்கையில், ஸ்ரீலங்காவில் அடிக்கடி தவறான தகவல்களை உள்ளடக்கிய பதிவுகள் வெளியிடப்படுவதாகவும் அடிக்கடி பரிமாற்றிக்கொள்ளப்படும் தகவல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழிபேசுவோர் உள்ளடங்கலாக மேலும் பல பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்கு அடையாளத் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.