ஆளுங்கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அதிபர்களுக்கு அழுத்தம்

0
Ivory Agency Sri Lanka

தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு பாடசாலை அதிபர்களை அழைத்துவர ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கும் முன்னணி ஆசிரியர் சங்கம், இது சட்டவிரோத செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் வேட்பாளர்கள் அழைக்கும் கூட்டங்களில் அதிபர்கள் பங்கேற்க வேண்டுமென வற்புறுத்தப்படுவதாகவும், இது ஒரு சட்டவிரோத செயல் என்றும், இந்த செயற்பாடுகளால் அதிபர்கள் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பதுளையில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், கெபிடல் சிடி ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பதுளை வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றும், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அதிகாரி ஆர்.எம். பிரேமதாசவும் பங்கேற்றதாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, அனுராதபுரம் மாவட்டத்தின் அதிபர்களை, ஜூன் 18ஆம் திகதி பாம் கார்டன் ஹோட்டலுக்கு அழைத்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜூன் 22 திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை ஆசிரியர் சங்கம் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு செய்த முறைப்பாட்டை அடுத்து, கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.”

இதேவேளை, ஜூன் 25ஆம் திகதி பதுளை ப்ரிம்ரோஸ் ஹோட்டலில், வேட்பாளர் உதித லொகுபண்டாரவின் கூட்டத்திற்கும் அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜோசப் ஸ்டார்லின், இலங்கை ஆசிரியர் சங்கமும் ஜூன் 22ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

தேர்தல் விதிகளின்படி அதிபர் சேவை அதிகாரிகளுக்கு அரசியல் சலுகைகள் இல்லை எனவும், அதிபர்கள் தேர்தலின்போது, சிரேஷ்ட அதிகாரிகளாக செயற்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கூட்டங்களுக்கு அதிபர்களை அழைப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம், தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Facebook Comments