ஸ்ரீலங்காவின் வைத்தியர் ஒருவரால் வெளியிடப்பட்ட இனவாத கருத்துக்களால் அவருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கௌரவ விருதை வெளிப்படை தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச நிறுவனம் மீளப் பெற்றுள்ளது.
ட்ரான்ஸ்பெரன்ஷி ஸ்ரீலங்கா நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெளியிட்டிருந்த அறிக்கையில் அந்த அந்த நிறுவனத்தினால் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக மஹரகம புற்றுநோயியல் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க நேர்மையான நபருக்கான விருது மீளப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான நிதியத்தின் ஸ்தாபகரான எம்.எஸ்.ஏச். மொஹமட் மற்றும் அவரின் குழுவினர், புற்றுநோய் நோயாளர்களுக்கு தேவையான இயந்திரங்களை மகஹரகம வைத்தியசாலைக்கு கொள்வனவு செய்யும் வகையில் சேகரித்த 14 கோடி ரூபா நிதி, வைத்தியசாலைக்கு கிடைக்கவில்லை என மஹரகம வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க கடந்த வருடம் தனது முகநூலில் போலியானதும் வெறுக்கத்தக்கதுமான கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து ட்ரான்ஸ்பெரன்ஷி இன்டநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது முகநூலில் வெளியிட்ட வெறுப்புணர்வு கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய ட்ரான்ஸ்பெரன்ஷி இன்டநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, அவருக்கு வழங்கிய விருதை மீளப் பெறத் தீர்மானித்துள்ளது.
கடந்த டிசம்பரில் வைத்தியர் திஸாநாயக்க தனது முகநூலில் தாக்கும்விதமாகவும் அவதூறான முறையில் கருத்துக்களை பதிவிட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறத் தீர்மானிக்கப்பட்டதாக ட்ரான்ஸ்பெரன்ஷி இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபயசேகர ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக வைத்தியர் திஸாநாயக்கவிற்கு மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் பயன்படுத்தவில்லை என ட்ரான்ஸ்பெரன்ஷி இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் புகழ்பெற்ற நபர்களுக்கு, மதிப்புமிக்க நேர்மையான நபருக்கான விருதை ட்ரான்ஸ்பெரன்ஷி இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் வருடாந்தம் வழங்கிவருகின்றது.
புற்றுநோய் வைத்தியசாலையின் ஊழியர்கள் குழு, கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்படுவதற்கு முஸ்லீம் நபர் மீது குற்றஞ்சாட்டிய அவர், நடமாடும் குண்டுகள் என வைத்தியர் திஸாநாயக்க விருது மீளப் பெறப்பட்ட பின்னர் தனது முகநூலில் அவமதிக்கும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.
சிகிச்சைகளுக்காக வருகைதந்த நபர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்த பின்னர், வைத்தியசாலையின் ஊழியர்கள் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
வைத்தியர் திஸாநாயக்க தனது முகநூலில், நோயாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த நோயாளி பொய் கூறியதாகவும் உண்மையை மறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நோயாளியை நடக்கும் குண்டுகள் என அடையாளப்படுத்தியமை, வைத்தியருக்கு எந்த அளவு பொருத்தமான விடயம் என சமூக ஊடக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புவதை அவதானிக்க முடிந்துள்ளது.
கொவிட் 19 தொடர்பில் அறிக்கையிடும் போது இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக் கூடாது என நாட்டின் பிரதான சுகாதார அதிகாரியான விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஏறத்தாழ நாட்டின் அனைத்து ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய ஏழு ஊடக அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அரச ஊழியர்களுக்கும் இந்த வழிகாட்டல்கள் செல்லுபடியானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
மகரஹம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தின் கீழ் எம்.ஏச்.எம்.மொஹமட் தலைமையில் புற்றுநோய்க்கு எதிராக போராடும் குழு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தது.
கீழ்தரமான நடத்துதல், அல்லது எதிரியாக நடத்துதல் அல்லது வன்முறை வடிவத்தில் மோதலை தூண்டுவது அல்லது இன அல்லது மத குரோதங்களை பரப்புவதில் யாரும் ஈடுபடக் கூடாது என சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக புற்றுநோய்க்கு எதிராக போராடும் நிதியத்தின் ஸ்தாபகர் எம்.எஸ்.ஏச். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மகரஹம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க தமக்கு எதிராக முன்வைத்துள்ள நிதி மோசடிக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ள எம்.எஸ்.ஏச். மொஹமட், புற்றுநோய்க்கு எதிரான போராடும் நிதியத்தை சுகாதார அமைச்சே நிர்வகித்துவருவதாகவும் அதில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அதேபோன்று தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் கீழ், மகரஹம வைத்தியசாலையின் கணக்கு வழக்குகள் பேணப்படுவதாக தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் கீழ் இந்த கணக்குகள் பேணப்படுவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவும் உறுதிப்படுத்தியிருந்தார்.