கொரோனா தொற்று காரணமாக 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

0
Ivory Agency Sri Lanka

ஸ்ரீலங்கா காவல்துறையின் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா காவல்துறையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் குறைவான அதிகாரிகளே கடறமையாற்றுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 28 காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு, செப்டெம்பர் 2 ஆம் திகதி, பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிறப்பாக பணியில் இயங்கிய நிலையில் உயிரிழக்கும் ஒருவருக்கு அவரது பதவிக்காலம் முடியும் வரை அவரது சம்பளம் வழங்கப்படுகின்ற நிலையில், குறித்த அதிகாரிகளுக்கும் அதே நடைமுறையை பின்பற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர்களுடன் சூம் தொழில்நுட்பத்தில் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்ளக பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்திய அமைச்சர், இந்த கடுமையான தொற்றுநோய் சூழ்நிலையிலும் போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற அனுமதிக்காமை குறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு, அவர்களை எளிதில் அடையாளம் காணலாம், எனினும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்படுபவர்களை அடையாளம் காண்பது சுலபமல்ல, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் முதலில் தனிமையில் இருந்து பின்னர் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கி பயணிப்பார்கள். இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கீழ் விசேட புலனாய்வுக் குழுக்கள் இரண்டு அமைக்கப்படும் எனவும், அதில் ஒன்று அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் தொடர்பிலும், மற்றுமொரு குழு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றிய 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதன்போது தெரிவித்தார்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி ஸ்ரீலங்கா காவல்துறையின் 155ஆவது ஆண்டு நிறைவு என்பதோடு, தற்போதைய காவல்துறைமா அதிபர் ஸ்ரீலங்காவின் 35ஆவது காவல்துறை அதிபராவார்.

Facebook Comments