ஷவேந்திர சில்வாவின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் 17,000 பேருக்கு பதவி உயர்வு

0
Ivory Agency Sri Lanka

இராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் கடந்த ஆறு மாதங்களில் 17,000 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஆயுதப் படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 313 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் காலப் பகுதியில் ஏனைய இராணுவத்தினர் 2402 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற 313 பேரில் பிரிகேடியர் தரத்தில் இருந்த 29 பேர் மேஜர் ஜெனரல் தரத்திற்கும் கேணல் தரத்தில் இருந்த 51 பேர் பிரிகேடியர் தரத்திற்கும் லெப்ரினன் கேணல் தர அதிகாரிகளாக இருந்த 95 பேர் கேணல் தரத்திற்கும் மேஜர் தரத்தில் இருந்த 138 பேர் லெப்ரினன் கேணல் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

”பாராட்டத்தக்க சேவையை மேம்படுத்தும்” வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தப் பதவி உயர்வுகள் மன உறுதியையும் கடமைக்கான அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கும் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மேலும் படைப்பிரிவுகளில் உள்ள 14,617 இராணுவத்தினரும் ஸ்ரீலங்கா இராணுவத்தில் தன்னார்வ படையிலுள்ள 1785 சிப்பாய்களும் அடுத்த பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய யுத்த வெற்றி வீரர்களின் நினைவுதினத்துடன் இணைந்ததாக நாட்டினதும் பிராந்தியத்தினதும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் அதேவேளை மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத அச்சுறுத்தல், உலகளாவிய தொற்றுநோய் போன்ற பேரழிவுகளின் போது இராணுவ வீரர்கள் செய்யும் தன்னலம் அற்ற மற்றும் பல்வேறு தியாங்களுக்கான மதிப்பை வழங்கும் வகையில் இராணுவத் தளபதியின் ஊக்கத்தினால் 14,617 இராணுவத்தினருக்கு இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments