அடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு இம்முறை தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை உள்ளடக்கிய இணையத்தளமொன்றை நடத்துவது தொடர்பில் இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று கவனம் செலுத்தியுள்ளது.

தமது இணையத்தளத்தில் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் குற்றவியல் நடத்தைகள் புதுப்பித்து வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.

இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வொன்றிற்காக தயாரிக்கப்பட்ட காணொளியில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இணையத்தளம் ஊடாக வேட்பாளர் ஒருவருக்கு குற்றவியல் நடத்தை அது தொடர்பில் அறிக்கையிடுவதன் மூலம் அவர் தொடர்பில் சரியான தகவல்கள் மக்களை சென்றயுடையும் என மஞ்சுள கஜநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

”இதுவொரு சிறந்த விடயம்.காரணம் ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர்கள் இருந்தாலும் பெரும்பான்மையான வேட்பாளர்கள் குற்றவியல் நடத்தை இல்லாமல் இருக்கக் கூடும்.அத்தகைய புதுப்பிக்கப்படும் இணையத்தளத்தில் வேட்பாளர்கள் தொடர்புபட்ட நீதிமன்ற செயற்பாடுகள், ஊழல் அல்லது மோசடி, அவருக்கு எதிராக எத்தனை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? அவருக்கு எதிராக எவ்வகையான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன அல்லது அவர்கள் உண்மையில் என்ன தவறு செய்தார்கள் என்பதை சரியான முறையில் மக்கள் மயப்படுத்த முடியும்.”

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கடுமையான முறையில் தேர்தல் கண்காணிப்பிற்கென பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மஞ்சுள கஜநாயக்க மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.

அவர்களில் 196 பேர் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தெரிவுசெய்யப்படும் அதேவேளை ஏனைய 29 பேரும் தேசிய பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments