இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்ற அளவிற்கு வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்ற நிலையில், அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து தகவல்களை மறைப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகள் தகவல்களை தணிக்கை செய்வதாக, பொது சேவையில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ள சட்டத்தரணிகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு உதவும் ஒரு வழிமுறையை முன்மொழிந்துள்ளது.
சுகாதார ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கப்படுவதன் ஊடாக, கொரோனா தொற்றுநோயின் உண்மையையும் கட்டுப்பாட்டையும் மறைக்க சுகாதார அமைச்சின் செயலாளர் முயற்சி செய்வதாக, வைத்திய ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சுகாதார செயலார்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் காணப்படுகின்ற போதிலும், களத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதார ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, குறைந்தது இதுத் தொடர்பில் ஒரு கலந்துரையாடலைக்கூட நடத்தாமல், இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது சுகாதார சேவையில் கடுமையான அதிருப்தியை உருவாக்கக்கூடும் என ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.
”எங்களை தூண்டிவிட்டு தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எம்மைத் தள்ளிவிடாதீர்கள்” என வலியுறுத்தியுள்ள ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சு விதித்துள்ள மீதான தடையை நீக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தொற்றுநோய் பற்றிய தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்தும் சில சுகாதார நிபுணர்களின் அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட வேண்டாமென, கொரோனா தொற்றை தடுக்கும் செயற்பாட்டிற்கு பொறுப்பான ஒரு தலைவரால் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது எனவும், அவர்களின் அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடக்கூடாது எவும், ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட, குறித்த பிரதானி ஊடகவியலாள்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ள ரவி குமுதேஷ், சில ஊடகங்கள் அதை இன்றுவரை செயற்படுத்துவதை தன்னால் காணக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வெளியிடுவதற்கு தடை விதிப்பதன் ஊடாக கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என ரவி குமுதேஷ் சுகாதார அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் தொடர்பாக சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்திய தகவல்களின் உண்மைத் தன்மையை அடிப்படையாக் கொண்டு, மே 20 வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் கருத்து வெளியிட்ட, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, நாளாந்தம் 3,500 பேர் தொற்றுக்குள்ளாவதாகவும், இந்த எண்ணிக்கையின் மூன்று மடங்கு சமூகத்தில் காணப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
தொற்றுநோயின் உண்மையான விபரங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதன் விளைவுகளையும் அவர் விளக்கினார்.
”நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல் மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் மேலும் நோய் பரவ வழிவகுக்க கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு கோரினால் மக்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். ஆகவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது.”
அனைத்து சுகாதார சேவைக அதிகாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையானது,
தொற்றுநோய் குறித்த தகவல்களை மறைக்கும் முயற்சியேயென, சுதந்திர ஊடக இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், பல்வேறு ஆதாரங்கள் மூலம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறி, தொற்று நோய் குறித்த தகவல்களை மறைக்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை சுதந்திர ஊடக இயக்கம் கண்டிக்கிறது” என அதன் ஏற்பாட்டாளர் சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளிடமிருந்து ராஜபக்சர்களுக்கு பரிந்துரைகள்
தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைக் கேள்விக்குள்ளாக்கும் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம், வெளிப்படைத்தன்மையைக் பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
“வெளிப்படையான சுகாதார நிபுணர்களின் தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறை, தற்போதைய ஜனாதிபதி செயலணியில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.”
தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இலங்கை அரசு பெற்ற பணம், அது செலவு செய்யப்பட்ட விதம் மற்றம் அது கணக்காய்வு செய்யப்பட்டதா? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி மற்றும் நன்கொடைகள் பெறப்பட்டு வருவதால், இதுபோன்ற திறமையான மற்றும் வெளிப்படையான பொறிமுறையானது இந்த நேரத்தில் அவசர மற்றும் அவசிய தேவை என்பதை அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட இடுகம நிதியத்திற்கு கிடைத்த நிதி செலவிடப்பட்ட விதம் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்தாலும், அதன் தெளிவற்ற தன்மை குறித்து சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
2005ஆம் ஆண்டு இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் 13ஆம் பிரிவில் உள்ள விதிகள் இத்தகைய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்பதை தெளிவாகக் விளக்குவதாக குறித்த சங்கம் ராஜபக்ச சகோதரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சட்டத்தால் நிறுவப்படவுள்ள அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையில், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பிரதிநிதிகள் சபை எடுக்கும் தீர்மானங்கள் அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் வெல்லும் வகையில் அமைய வேண்டுமென சட்டத்தரணிகள் கூறுகின்றனர்
“எனவே, கொரோனா தொற்றை தடுக்கும் செயற்பாட்டில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.”
கொரோனாவை தடுப்பதற்கு, தற்போது அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பதிலாக, 2005ஆம் ஆண்டின், இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் 13ஆம் இலக்க விதிகளுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை நிறுவப்பட வேண்டுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், அந்தச் சட்டத்தின் பிற விதிகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்றை அடக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணிகளான சேனக பெரேரா, நாமல் ராஜபக்ச, அச்சலா செனவிரத்ன, அருணி தனபாலராச்சி, உபாலி ரத்நாயக்க, தம்பையா ஜயரத்னராஜா, மஞ்சு ஸ்ரீ சந்திரசேன மற்றும் சைனுல் லுதுபி ஆகியோர் இணைந்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.