கைதிகளுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை என்ற சிவில் சமூக அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளார்.
சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே சமீபத்தில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்ததாக அரசாங்கம் இணையதளம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
பல்லேகல திறந்தவெளி சிறைக்குச் சென்று கைதிகள் குறித்து ஆராய்ந்த இராஜாங்க அமைச்சர், அந்த சந்தர்பத்தில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவை ருசித்து பார்த்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளின் உணவு தொடர்பாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கூடுதல் அக்கறைகாட்டுமாறும் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குடிநீர் மற்றும் சோறு மாத்திரமே வழங்கப்படுவதாக செப்டம்பர் 11ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில் கைதிகளின் உரிமைகளுக்கான முன்னணி அமைப்பு கருத்து வெளியிட்டிருந்தது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா மேலும் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
கைதிகளை மனிதர்களாகக் கருதுவது முக்கியம் என்றும், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கும், அவர்களை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் தேவையான சூழலை உருவாக்குவது அனைவரின் கடமையும் பொறுப்புமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல் திணைக்களத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீதாமணி கருணாரத்ன, சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய, புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க, புலனாய்வு பிரிவு ஆணையாளர் டி.ஐ. உடுவர மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் உதார தீக்ஷன த சில்வா உள்ளிட்டவர்கள் ஆகியோர் இந்த சந்தர்பத்தில் இராஜாங்க அமைச்சருடன் இருந்துள்ளனர்.