இளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்

0
Ivory Agency Sri Lanka

இளைஞர்களிடையே மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் மனித உரிமை கலாச்சாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் முகாமுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

“கொவிட் -19 பாதிப்பு மற்றும் இளைஞர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த முகாம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகளை இலக்காகக் கொண்டது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, இந்த வருடம இளைஞர் முகாம், இணையவழி மாநாடு மற்றும் இரண்டு நாள் வதிவிட முகாம் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழி பேசும் மக்கள், ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பழங்குடி மக்கள், பெருந்தோட்ட சமூகங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உள்ளிட்ட பல்வேறு இன மற்றும் மத குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் இந்த முகாமுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரிகளும் 18-29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒன்றில் தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

முகாமின் போதான தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கும்.

விண்ணப்பங்களை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், (www.hrcsl.lk) இணையதளத்திலோ அல்லது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களிலோ பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை, 2020 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், பிராந்திய அலுவலகத்தில் கையளிக்க முடியும், அல்லது கல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் பிரிவு, இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, இல 14, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, கொழும்பு-04 என்ற முகவரிக்கு அனுப்ப முடியும், அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு, இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் பிரிவை 011-2505569 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

Facebook Comments