‘தீவிர இனவாத குழு’ ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு அரசியல் இலக்கு தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் சிங்கள பௌத்த குழு, சிங்கள முடியாட்சியை நோக்கி இலங்கையை பின்னோக்கி கொண்டுச் செல்லும் ஒரு தீவிரவாத செயற்பாட்டை முன்னெடுப்பதாக சிவில் சமூக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

“ஜனாதிபதிக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்குவோர் கடந்த காலங்களில் தீவிரமாக இனவாத சிந்தனையாளர்களாக இருந்தவர்கள்” என சிவில் சமூக செயற்பாட்டாளர் கே.டபிள்யூ ஜனரஞ்சன நேற்று முன்தினம், “பேரழிவு 20 வேண்டாம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணத்திற்காகவே, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இனரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமான ருவன்வெலிசாயவில் பதவியேற்றதாக சட்டத்தரணி ஜனரஞ்சன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தியல் பங்குதாரர்களுடன் இணைந்து அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான இரண்டு அடிப்படை விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்று, நாம் ஒரு சிங்கள-பௌத்த முடியாட்சிக்கு செல்ல வேண்டும். உதாரணமாக, பண்டுகாபய போன்ற ஒரு காலத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இரண்டாவதாக, நலன்புரி அரசைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியின் கருத்தியல் பங்குதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என என்று தி டுமாரோவின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன தெரிவிக்கின்றார்.

”அச்சமும், எதிர்ப்பும்”

மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவதும், மக்களின் வறுமையை தொடர்ந்து பேணுவதும் இதன் ஊடாக, பொது மக்களின் வாக்குகளை ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலில் கொள்ளையடிப்பதுமே நலன்புரி அரசை தொடர்ந்து பேணுவதன் நோக்கமென சிவில் சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தின் ஆபத்துகளின் அடிப்படையில் அரசாங்கம் எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளதாக குறிப்படும் புதிய அரசியலமைப்பின் ஆபத்தை புரிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கும் ஜனரஞ்சன, 20ஆவது திருத்தத்திற்கு அஞ்சுவதுபோல், புதிய அரசியல் யாப்புத் தொடர்பிலும் அச்சமடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

அந்த அச்சத்தின் விளைவால் பாரியளவில் எதிர்ப்புகளை வெளியிட வேண்டும் எனவும், உறுதியான தீர்மானத்திற்காக வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தப்பட வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments