இராணுவமயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட தென்பகுதி அமைப்புகள் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

அரசாங்கம் படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளி, மியன்மார் நாட்டைப்போல மாற்றி வருவதாக சிவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாட்டு மக்களுக்கு மிகவும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அச்சலா செனவிரத்ன எச்சரித்துள்ளார்.

விசாரணையின்றி தடுப்புக்காவலைப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு போதுமான எதிர்ப்புகள் நாட்டில் வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

”பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் நாங்கள் யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அந்த வர்த்தமானி அறிவிப்பை பாருங்கள் அந்த அறிவிப்பின் மூலம் ஒரு வருடத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஒருவரை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. மக்கள் இதைப் பற்றி பேசுவதில்லை. ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. இனவெறி அல்லது மதத்தைப் பற்றி பேசுவதாக சந்தேகத்தின் பேரில் யாரையும் நாளை கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.”

”இராணுவ மயமாக்காதீர்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை அழிக்க வேண்டாம், இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்த வேண்டாம், இனக்குழுக்களுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம், சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீர்கள்.” என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, “இலங்கை தேசத்தின் நீதி, நேர்மைக்காக மக்களின் போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக, கடந்த மார்ச் 25ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டடத்தை, மக்கள் சக்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நாடு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற இடமாக மாறி வருவதாக சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மக்களுக்கு எதிராக அல்ல, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைளால் நாட்டு மக்களின் உரிமைகள், பிரஜைகளின் மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சுதேஷ் நந்திமல் வலியுறுத்தினார்.

“எதிர்காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை கூட கிடைக்குமா என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் காணப்படுகின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வன வளங்களை அழிப்பதன் மூலமும், விலங்குகள் கூட வாழ முடியாத சூழலை உருவாக்குவதன் மூலமும் பழங்குடி மக்களின் முழு வாழ்க்கை முறையையும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுதேஷ் நந்திமல் சில்வா மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கு தமது கலாச்சாரத்தை பாதுகாக்க முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சுதேஷ் நந்திமல், அரசாங்கம் மக்களின் கலாச்சாரத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாக குற்றம் சாட்டிய அவர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிறப்பிடம் அந்த மக்களின் தாயகம் என வலியுறுத்தினார்.

”ஒருவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவர் ஒரு தமிழரா? ஒரு முஸ்லீமா? அல்லது சிங்களவரா? என்பது முக்கியமல்ல. இந்த நாடு அவரது தாய் நாடாக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவரது தாய்நாடு இந்த நாடு” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து குரல் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேஷ் நந்திமல் சில்வா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments