இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்தும் சிங்கக் கொடியின் கீழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவது கடினம் என வடக்கின் அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
“சிங்கக்கொடி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் அது பயன்படுத்தப்படும் விதம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இனவாதத்தையும் மதவெறியையும் பரப்புவதற்கு அரசாங்கம் இந்த சிங்கக்கொடியை பயன்படுத்துகிறது” என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ச அரசுக்கு எதிராக தெற்கில் சிங்கக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்களுடன் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இணைந்து போராட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
“சிங்கக் கொடியை ஆக்கிரமிக்கும் கொடியாகவே பார்க்கிறோம். எங்களுடைய நிலத்தை கையகப்படுத்த, எதோ எங்கள் தேசத்தை கைப்பற்றியதுபோல.”
“நாட்டில் வாழும் அனைவருக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.”
இந்த நாட்டில் வாழும் தமிழர்களை சமமாக நடத்துவதற்கு அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு சிங்கள தலைவர்களும் முன்வரவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவிக்கின்றார்.
“தமிழ் மக்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தாலும் இந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சம உரிமை வழங்கமாட்டார்கள். சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதற்கு முதலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் மூலம் சம உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.”