வன்னி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த நிலையில், மீதமுள்ள வனப்பகுதிக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வவுனியாவில் உள்ள மாமடுவ மலையிவ் உள்ள வனப் பகுதி மூன்றாவது முறையாக தீப்பிடித்து எரிந்ததாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.
வவுனியாவில் உள்ள மாமடுவ மலை பிரதேசத்தில் கல் குவாரிகளை ஆரம்பிக்கவும், சோளப் பயிர்ச் செய்கைக்காகவும் காடு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என, பிரதேசவாசிகள் தெரிவிப்பதாக சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
காடுகள் தீக்கிரையாவது தொடர்பாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வவுனியா பொலிஸாரும் வனத்துறையும் ஒக்டோபர் 16ஆம் திகதி பிரதேசத்தில் ஆய்வினை மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மாமடுவ வனப்பகுதியில் 108 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இது நடைபெறுவதாக கிராம மக்கள் சந்தேகிக்கிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வவுனியாவிலிருந்து மடு மலைக்குச் செல்லும் வழியில் அழகிய மலையைப் போல தோற்றமளிக்கும் இந்த வனப்பகுதி தொல்பொருள் முக்கியத்தும் மிக்க இடமுமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின்போதுகூட நன்கு பாதுகாக்கப்பட்ட மாமடுவ மலைப் பகுதி, யுத்தம் நிறைவடைந்து சில ஆண்டுகளிலேயே கல் குவாரி ஒன்றை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக, சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர கரியவசம் தெரிவித்திருந்தார்.
காடுகளை அழித்தவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர்
வனப்பகுதியின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ள நிலையில், அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரவீந்திர காரியவசம் தெரிவிக்கின்றார்.
ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மாமடுவ புராதண குளத்தின் முக்கிய நீர்நிரப்பு பிரதேசம் தீயால் அழிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எலரா வம்சம், துட்டுகைமுனு வம்சம், அக்போ வம்சம் போன்றவற்றின் இடிபாடுகள் பெரும்பாலானவை மாமடுவ மலை மற்றும் மாமடுவ குளத்தின் அருகே காணப்படுகின்றன. எனவே இந்த பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த என்பதால் பாதுகாக்கப்பட வேண்டும்.” என சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹகச்சக்குடிய, அதம்பகஸ்வெவ, அக்பொபுர, மற்றும் விமகல்லா உள்ளிட்ட பல கிராமங்களின் முக்கிய முக்கிய நீரேந்து பகுதியாக இந்த வனப்பகுதி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த செய்திகளை ஜனாதிபதி சமீபத்தில் மறுத்திருந்ததோடு, ”தவறான செய்திகளை பரப்புவதற்கும் சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், காழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கமான 0707-555666 இற்கு வட்ஸ்அப் தகவல், குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தகவல்களை வழங்க, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.