ரணில் வடக்கில் நீர்த்தாரைப் பிரயோகம், தெற்கில் ஒரு கட்சி கண்டனம் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதித்தடைகள் மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களை மேற்கொண்டதை நாட்டின் பழமையான இடதுசாரிக் கட்சி ஒன்று கண்டித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கும் அவர்கள் எதிர்பார்த்த நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை எந்த நம்பகத்தன்மையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக நவ சமசமாஜக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நீதி கோரி மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என, நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டம், சமூக நீதி ஆணைக்குழுவை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த ஜனாதிபதியின் உரைகள் இனிமையாக இருக்கலாம், ஆனால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர்களின் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் நீண்டகாலத் தடுப்பு, சிவில் ஆட்சியில் இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி பதவியின் மரவு, பதவிப் பெயரால் அன்றி, நீதியைக் கோரும் மக்களுக்கு அதை வழங்குவதன் மூலம் மாத்திரமே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

ஜனவரி 15ஆம் திகதி, வட்டுவாகல், ஆனையிறவு உள்ளிட்ட பல இடங்களில் பேருந்தை தடுத்து நிறுத்திய இராணுவப் பொலிஸாரின் கெடுபிடிகளையும் பொருட்படுத்தாமல் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் இறங்கி தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தினர்.

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறும், பயங்கரவாதச் சட்டத்தை இல்லாதொழித்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இணைந்த வடக்கு – கிழக்கிற்கு மீளப்பெற முடியாத வகையில் அரசியல் அதிகாரத்தை வழங்குமாறும் கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிகின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுள்ளதாக கொழும்பில் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனவரி 15 அன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தவேளை, இந்தப் பிரச்சினைகளை கூட்டாக முன்வைத்த தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவ பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கை

Facebook Comments