சந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருப்பது ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’

0
Ivory Agency Sri Lanka

கைது செய்யப்படுவதில் ஒருசந்தேக நபருக்கு பொலிஸார் உதவியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும், சட்டத்தரணியுமான உதய பிரபாத் கமன்பிலவிடம் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனை பொலிஸார் கைது செய்யத் தவறியமைத் தொடர்பாக கடந்த வார இறுதியில் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரும், சட்டத்தரணியுமான கம்மன்பில, தானும் தன்னுடைய கட்சித் தலைவரான மதுமாதவ அரவிந்த 35 நாட்களாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாக இருந்ததாக கூறியிருந்தார்.

“ஒரு சட்டத்தரணியாக அவர் கூறியது முழு சட்டத் தொழிலுக்கும் அவமானம்” என சட்டத்தரணி ஷெஹாரா ஹேரத் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

“ஒரு சந்தேகநபரை 35 நாட்களுக்கு கைது செய்வதைத் தடுக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு உதவியமைத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தை, சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்று அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கருத்துத் தொடர்பில் ஒரு குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு, இது ஒரு சட்டத்தரணியிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தை மீறலாகும்”

அமைச்சர் கம்மன்பில ஒரு சட்டத்தரணியாக பகிரங்கமாக ஒப்புதல் அளிப்பதன் மூலம் சட்டத்தரணிகளுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாக ஷெஹாரா ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொடையில் இடம்பெற்ற முஸ்லீம் விரோத செயற்பாடு தொடர்பாக உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments