சிறையில் இடம்பெற்ற மற்றொரு கொலை குறித்து முறைப்பாடு

0
Ivory Agency Sri Lanka

சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தடுப்புக்காவல் கைதியின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சிறைக்கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

தமது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு, மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான யு.ஜி உபுல் நிலாந்த, , இரு சிறைச்சாலை அதிகாரிகளின் தாக்குதலில் உயிரிழந்திருந்தர். நவம்பர் 3ஆம் திகதி இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் 40 வயது, அம்பாறை – நவகம்புர-4 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த உயிரிழப்புத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை சிறைச்சாலை கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவலர்களின் கைகளினாலேயே உயிரிழப்பு

ஒரு கைதியின் பாதுகாப்பிற்கு சிறை நிர்வாகமே பொறுப்பு என்ற நிலையில், சிறை அதிகாரிகளால் ஒரு கைதி கொலை செய்யப்படுவது பாரதூரமான விடயமென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் சந்தர்ப்பத்தில் சிறைகளில் இதுபோன்ற கொலைகள் இடம்பெற்றதை நினைவு கூர்ந்த மனித உரிமை சட்டத்தரணி, இந்த குற்றங்களில் எந்தவொரு சிறை அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் வலியுறுத்தினார்.

இவ்வாறான சூழ்நிலை, இதுபோன்ற கொலைகளைச் செய்யும் தைரியத்தை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் எனவும் சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.

கைதிகள் குற்றவாளிகள் என்ற கருத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சமூகமயமாக்கியுள்ள சூழ்நிலையில் சிறை அதிகாரிகளால் கைதிகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில் இந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சில தடைகள் காணப்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்தக் குழு, எனினும் அவற்றை மூடிமறைக்க இடமளிக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

மஹர மற்றும் அனுராதபுரம்

சிறையில் இருந்து தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக குறிப்பிடப்படும் ஒரு கைதி, அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கடந்த மே மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மே 3ஆம் திகதி மஹர சிறையில் இருந்தபோது உயிரிழந்த காவிந்த இசுறுவின் தந்தை சுமனதாச திசேரா இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

தனது புதல்வரின் மரணம் ஒரு தாக்குதலால் நிகழ்ந்ததாகவும், அவரது கால்கள் மற்றும் கைகள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாய் ஆர்.எம்.கருணாவதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில், கைதி ஒருவர் உயிரிழந்தமைத் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனது கணவனைக் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆராச்சிலாகே சமன் குமாரவின் மனைவி, ஓகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments