மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் அளித்த அறிக்கையை வெலிசர நீதவான நீதிமன்றம் நேற்று (09) நிராகரித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட 11 கைதிகளின் உடல்கள் தொடர்பிலான தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவடையும் வரை சடலங்களை எதுவும் செய்யக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்கு முன்னதாக பரிந்துரைத்திருந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை சடலங்களை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது குறித்து தீர்மானிக்க முடியாது என அறிவித்துள்ள நீதவான் புத்த ஸ்ரீ ராகலா, இதுத் தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்பிக்குமாறு, மஹர சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்?
சிறை ஊழியர் ஒருவரின் உதவியுடன் உயிர் பிழைத்த கைதியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, சிறை அதிகாரிகளாலேயே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
“சிறைச்சாலை அதிகாரிகளே எம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர், கைதிகளின் கைகால்கள் உடையும் வகையில் தாக்கப்பட்டனர். பின்னர் கைதிகள் கிளர்ந்தெழுந்தபோது சுடப்பட்டனர். உயிர் தப்பியவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனைய கைதிகள் யாரும் சிறைக்கூடங்களில் இருந்து வெளியே வரவில்லை. அவ்வாறு அவர்கள் வந்ததாகக் கூறுவது பொய் ”என இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் கித்சிரி விஜேசிங்கவிடம் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் எரியூட்டுவதற்கு தடை உத்தரவைக் கோரி, உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராடிவரும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா, வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் டிசம்பர் 4ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
உறவினர்கள் சார்பாக ஒரு சட்ட வைத்திய அதிகாரி
பிரேத பரிசோதனை இடம்பெற்ற வேளையில், வேதனை அடைந்த தரப்பு சார்பாக, சட்ட வைத்திய அதிகாரி ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்த விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த நீதவான், சட்ட வைத்திய கல்லூரியின் உறுப்பினரான வைத்தியர் ஜீன் பெரேராவை நியமித்துள்ளதாக சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
11 பேர் உயிரிழந்த மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைதுப்பாக்கிச் சூட்டால் இடம்பெற்றது என குற்றப் புலனாய்வு பிரிவின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி சட்டமா அதிபர் திணைக்களம் முதன் முறையாக நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கைதிகளின் பிரேத பரிசோதனைகளை, மூன்று சிரேஷ்ட தடயவியல் நோயியல் நிபுணர்கள் அரச இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் துப்பாக்கி நிபுணர் குழுவினால் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, நிஷாரா ஜயரத்ன நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை நான்கு உடல்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ள போதிலும், அனைத்து உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகளை விசேட நிபுணர்கள் முன்னிலையில் மீண்டும் நடத்துமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இறந்த கைதிகளின் உடல்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகம வைத்தியசாலையில் இருந்து அவற்றை, தேசிய் தொற்று நோயியல் வைத்திசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கட்டிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், மேலதிக விசாரணைகளுக்காக சொத்து சேதங்கள் குறித்து அரசின் தலைமை மதிப்பீட்டாளரின் அறிக்கையைப் பெற சிறைச்சாலையில் ஆய்வினை மேற்கொள்ள அனுமதி கோரிய அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணிக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.