ராஜபக்ச ஆட்சியை இராஜினாமா செய்யக் கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் இவ்வாறு அமைந்துள்ளது.
“காலி முகத்திடல் மைதானத்தில் இளைஞர்கள் 7 நாட்களாக நடத்தி வரும் அமைதியான அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள விடயத்தை, நேற்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பல பொலிஸ் ட்ரக் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடயம் நிரூபித்துள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல அமைப்புக்களின் உத்தியோகபூர்வ போராட்டம் காரணமாக பொலிஸ் பாரவூர்திகள் அகற்றப்பட்டுள்ளதாக பின்னர் அறியமுடிந்தது.
அனைத்து குடிமக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமையாகும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் தங்கள் உயிரை துச்சமென மதித்து அதனை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அந்த உரிமையைப் பயன்படுத்தும் விதம், அத்தகைய வெளிப்பாட்டில் பங்கேற்கும் குடிமக்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதை ஆட்சேபனையாக முன்வைக்க அவர்களுக்கும் உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அதன் செயல்பாடு மக்களுக்கு விரோதமானது எனின் இராஜினாமா செய்யும் உரிமையும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையாகும்.
எனவே, காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்பதால், அதனை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் நிபந்தனையின்றி கண்டிக்கிறது.”