பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த முருகுபிள்ளை கோகுலதாசன் ஒடுக்குமுறையான அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது “மிகத் தெளிவாக ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்“ என்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைவர் டானியல் பஸ்டார்ட் கூறியுள்ளார்.
ஃபேஸ் புக் பதிவு ஒன்றில் விடுதலைப் புலிகளின் படங்களை பதிவு செய்ததாகக் கூறி கோகுலதாசன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பான நிகழ்வுகளின் படங்களையே பதிவு செய்தார் என்று கூறப்படுகிறது.
“நிபந்தனையின்றி உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டுமென்று இலங்கையின் சட்டமா அதிபரை வலியுறுத்துகிறோம்“, தமிழர்களின் பிரச்சனைகளுக்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குரல் கொடுக்கும் அனைத்து ஊடகவியலாளர்களையும் துன்புறுத்துவதை பாதுகாப்பு படையினர் அவசியம் நிறுத்த வேண்டுமென்று ஆர்.எஸ்.எஃப் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரின் நிலையை வெளிப்படுத்தி இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பு ஜே.டி.எஸ் டிவீட் செய்துள்ளது.
கோகுலதாசன் முகவும் இரகசியமான முறையில் கடந்த நவம்பர் 28ஆம் திகதி மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டார் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்துக்கு அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓராண்டுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கைச் சேர்ந்த ஏழு ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருந்தது. வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பணம் பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டி அந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெளியான துண்டுப் பிரசுரங்களில் இவர்கள் ஏழு பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் வட்டமிட்டு அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
ஆனால் இது குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்யவோ அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவோ உள்ளூர் பொலிசார் மறுத்துவிட்டனர்.
உலகளவில் ஊடக சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் பட்டியலில் இலங்கை 127ஆவது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.