தமிழ் பயங்கரவாத தடைச் சட்ட கைதிகள் குறித்து ஜனாதிபதி மனோவுக்கு வாக்குறுதி

0
Ivory Agency Sri Lanka

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தீபாவளித் தினத்தைப் போன்று எதிர்வரும் தைப் பொங்கல் பண்டிகையின் போதும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி தமிழ் கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வினவியபோது, அவர்களில் சிலரை பொது மன்னிப்பின் கீழ் தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கொழும்பில் வசிப்பவர்களின் பதிவை கைவிடுமாறு மீண்டும் பொலிஸ் மா அதிபரிடம் கூறுவதாகவும் உறுதியளித்தார். ”

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தீபாவளி வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதபக அரசாங்கம் அறிவித்த பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளில் பாதி பேரை முழுமையாக விடுவிக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,000ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளான ரகுபதி சர்மா மற்றும் வேலாயுதன் வரதராஜன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை மீளப் பெறாதவரை அவர்களின் முழு விடுதலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய இரு அரசியல் கைதிகளான சுதா மற்றும் காந்தன் ஆகியோருக்கு சிறைத்தண்டனை வழங்கி புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் புனர்வாழ்வளிக்கப்படுவார்களா அல்லது விடுவிக்கப்படுவார்களா என்பதை ஜனாதிபதி செயலகம் சிறைச்சாலைக்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

இதனால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 23 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்திவேல் இலங்கேஸ்வரன், 15 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த வீரகுமார் ராகுலன் மன்னாரைச் சேர்ந்த ஜெபநேசன் மற்றும் வத்தளையைச் சேர்ந்த இராமநாதன் நவதேபன் ஆகிய நான்கு அரசியல் கைதிகள் மாத்திரமே ஒக்டோபர் 22ஆம் திகதி முழுமையாக விடுதலையாகி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மையான விருப்பம் இருந்தால் அமைச்சரவையும் சட்டமா அதிபர் திணைக்களமும் இணக்கப்பாட்டுக்கு வந்து அனைத்து அரசியல் கைதிகள் மீதான வழக்குகளையும் மீளப் பெற்று விடுதலை செய்ய முடியும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக பகிரங்கமாக கூறி அரசியல் கைதிகள் மற்றுமொரு தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாக, குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் திறன் பற்றி கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தந்தை மாரிமுத்து சத்திவேல் குற்றம் சாட்டுகிறார்.

“நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள், ஜனாதிபதியின் பொது மன்னிப்புக் கோருவதற்காக ஒரே அறிக்கையை மீண்டும் கூறுவது அரசியல் கைதிகளை குற்றவாளிகள் என பகிரங்கமாக முத்திரை குத்துகிறது. எனவே அமைச்சரவையும் சட்டமா அதிபர் திணைக்களமும் பேசி அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீளப்பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். இது அரசியல் கைதிகளுக்கான மரியாதையாக அமைவதோடு இன நல்லிணக்கத்திற்கும் முக்கிய விடயமாக அமையும்.” அருட்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Comments