ஐ நா அறிக்கை: போரினால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையரால் முன்வைக்கப்பட்டுள்ள மீளாய்வு அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் பிரச்சனைகள் இந்த அறிக்கையில் சரியாக பிரதிபலிக்கப்படவில்லை என்று அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கை தங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று அதிருப்தியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இரண்டு முக்கியப் பிரச்சினைகளான `வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்` மற்றும் தொடரும் `நில அபகரிப்பு` விஷயத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் `அடக்கி வாசித்துள்ளார்` என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஐநா பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நியாயம் கோரி நிற்கும் சூழலில் இம்முறை தங்களைக் கைவிட்டு தமது பிரச்சனைகள் விஷயத்தில் அரசின் ஊதுகுழலாகக் செயல்பட்டுள்ளது என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், விளை நிலங்களை இழந்த தமிழ் மக்களும் கவலையடைந்துள்ளனர்.

பொறுப்பு கூறல் மற்றும் நீதி பரிபாலன் ஆகியவற்றில் தாங்கள் தனிமைப்படுத்து அனாதைகளாக்கப்பட்டுள்ளோம் என்று தமது கணவன், சகோதரன், பிள்ளை, தகப்பன் ஆகியோரை இழந்த அவர்கள் வருந்துகின்றனர்.

தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் அதிபரும் ஐநா மனித உரிமைகள் அணையத்தின் தலைவருமான மிஷேல் பஷேலே பரந்துபட்ட அளவில் இலங்கை ` மோசமான மனித உரிமை மீறல்களில்` ஈடுபட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி போர் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்பு கூறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.’

“சர்வதேச குற்றங்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது“ என்று மட்டுமே அவரது அறிக்கை கூறுகிறது.

மேம்போக்கான இந்த குற்றச்சாட்டில் குறிப்பாக இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற `போர்க் குற்றங்கள்` குறித்து வெளிப்படையாக எதுவும் இல்லை என்பதை பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட `காணாமல் போனோர் அலுவலகம்` (ஓஎம்பி) அவர் புகழ்ந்துள்ளார். “பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலையும் அவர்களின் சூழலையும், இந்த அலுவலகம் கவனத்தில் எடுத்து அவர்களின் குரலாக ஒலித்துள்ளது“ என்கிறது அம்மையாரின் அறிக்கை.

ஆனால் அந்த அலுவலகமே `ஒன்றுக்கும் உதாவதது` என்று தமது உறவுகளைத் தேடும் குடும்பத்தார் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.

மிகவும் கொடூரமாக 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் காணாமல் போன பலர் இலங்கை அரச படையினரிடம் சரணடைந்தனர் அல்லது கையளிக்கப்பட்டனர்.

வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து `வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்` நலச் சங்கத்தின் தலைவியான யோகராசா கனகரஞ்சினி, ஓஎம்பி அலுவலகம் தோல்வியடைந்த ஒரு நிறுவனம், அதன் நம்பகத்தன்மை ஆரம்பத்திலிருந்தே கேள்விக்குறியானது என்று சாடியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையை தயாரிக்கும் முன்னர் தமது தரப்புக் கருத்துக்களை கேட்கவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது என்கிறார் கனகரஞ்சினி. ஐநா மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

(யோகராசா கனகரஞ்சனி காணொளி)

ஆணையரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது. அவர் இலங்கை அரசின் ஓஎம்பி அலுவலத்தின் சார்பாக பேசுகிறாரா அல்லது எம்மைப் போல் பாதிக்கப்பட்டர்களுக்காக குரல் கொடுக்கிறாரா என்று கனகரஞ்சனி கேள்வி எழுப்புகிறார்.

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் குறித்த ஆவணங்களை ஓஎம்பி அலுவலத்தில் சமர்ப்பித்து அவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரினர். குறிப்பாக ஐந்து நபர்களின் விவரங்களை அவர்கள் ஆவணமாக்கி கொடுத்திருந்தனர்.

ஆனால் இதுவரை ஒருவர் கூட அந்த அலுவலகத்தால் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த அலுவலகத் தலைவராக இருந்த சட்டத்தரணி சாலிய பீரிஸும் பதவி விலகிச் சென்றுவிட்டார். அவர் கடந்த நான்காண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதும் விவாதப் பொருளாகியுள்ளது.

பல ஆணைக் குழுக்களைத் தாங்கள் சந்தித்துள்ளதாக யோகராசா கனகரஞ்சனி கூறுகிறார்.

“போர் முடிந்த பிறகு 12 ஆணைக் குழுக்களை சந்தித்துள்ளோம். அதில் ஒன்றுகூட நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை மற்றும் அவர்களுக்கான வரையறையை எட்டுவதில் தோல்வியடைந்தன“ எனக் கூறும் அவர், ஆணைக் குழுக்கள் தங்களை அவமானப்படுத்தின எனவும் வருந்துகிறார்.

“உஙளுக்கு என்ன தேவை-ஆடு, மாடு, கோழிகள்“? எனத் தொடர்ச்சியாக வந்த ஆணைக் குழுக்கள் எம்மைக் கேட்டு அவமானப்படுத்தின என்கிறார் கனகரஞ்சனி.
ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையைச் சாடும் அவர் “ஆணையர் அந்த அறிக்கையை ஏன் வெளியிட்டார், தெர்ந்தா அல்லது அறியாமல் செய்தாரா?“ என வினவுகிறார்.

காணி அபகரிப்புத் தொடர்பிலும் ஐநா ஆணையரின் அறிக்கை விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அரசின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, பஷேலே அம்மையார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வடக்கு-கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் பிடியிலிருந்த 90% நிலங்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

“2009ஆம் ஆண்டு முதல் பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 89.26 வீதம் அரச நிலங்களும் 92.22 வீதம் தனியார் நிலங்களும் 31 டிசம்பர் 2019 வாக்கில் திருப்பியளிக்கப்பட்டுள்ளன“ என்கிறது அவரது அறிக்கை.

அரசின் தரவுகளை எவ்வித ஆய்வும் விமர்சனமும் இல்லாமல் அங்கீகரிப்பது ஏற்புடையதல்ல என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

விரிவான தகவலை வெளியிடும் அவர் வடக்கு கிழக்கில் 8000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இன்னும் இராணுவத்தினரால் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்கிறார்.

(கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணொளி)

விவசாயக் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசமுள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர் என்கிறார் சிறீதரன்.

“நில அபகரிப்பு தொடர்ந்து நடக்கும் வேளையில், ஐநா மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு சான்று வழங்கியுள்ளதை எம்மால் ஏற்க முடியாது. இதேதான் கடந்த 2015லும் நடைபெற்றது“

முன்னர் இருந்த `நல்லாட்சி` அரசாங்கம் பெருந்தொகுதியான நிலங்கள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டன என்று கூறியது. ஆனால் தமிழ் மக்களோ வீதி வீதியாக அலுவலகம் அலுவலகமாக அன்றாடம் அலைகின்றனர்.

“எனவே, இலங்கை அரசு நீதி வழங்கல், பொறுப்புக் கூறல் போன்றவற்றில் முன்னேற்றம் காட்டுகிறது என்பது அபத்தமானது மட்டுமின்றி ஆபத்தானதும் கூட“ என்கிறார் சிறீதரன்.

நிலங்கள் திருப்பியளிக்கப்படவில்லை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 1500 நாட்களுக்கும் மேலாக வீதிகளில் போராடுகின்றனர் , அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது, உள்நாட்டிலேயே அகதிகளாக அவர்கள் உள்ளனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

ஐநா அமைப்புக்கு கொழும்பில் அலுவலகமும் நாடு முழுவதும் முகவர்கள் உள்ள நிலையில் அவர்கள் கள ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டறிந்து மேலிடத்திற்கு உண்மையான தகவல்களைத் தெரிவித்திருக்க வேண்டும் எனும் குரல் வடக்கு கிழக்கு இலங்கையில் ஓங்கி ஒலிக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் போலவே இலங்கை அரசும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையை நிராகரித்துள்ளது.

இலங்கை அரசின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் `வன்முறைக்கு வித்திடும்` என்று கூறுவதைக் கண்டித்துள்ள அரசின் வெளியுறவுச் செயலரும் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே, ஐநா இலங்கையை “மிரட்டி அடிபணிய வைக்கிறது“ என்று பதிலளித்துள்ளார்.

“ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறு. அவர்களிடம் ஏதாவது இருந்தால், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்“ என்கிறார் இலங்கை வெளியுறவுச் செயலர்.

புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்களின் “தீய உள்நோக்கத்திற்கு“ ஐநா மனித உரிமைகள் ஆணையர் துணை போகக் கூடாது என்கிறது இலங்கை அரசு.

ஆனால் ஐநாவின் தலைமைச் செயலர் அண்டோனியொ குட்டரெஸ் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர் பொறுப்புக்கூறல் மற்றும் இணக்கப்பாடின்றி இலங்கையால் முன்னேற முடியாது என்று கூறியுள்ளார்.

“இன்றைய உலகில் மனித உரிமைகள், சட்டங்களை மதிப்பது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பது-அதாவது பொறுப்புக்கூறல் மற்றும் இணக்கப்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கைத் தொடர்பில் இது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன“

இந்த இரண்டு விஷயங்களை இலங்கை அரசும் அதன் மக்களுக்கும் தீவிரமாக மனதில் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று பதிலளித்துள்ளார் அண்டோனியோ குட்டரெஸ்/

அதேவேளை இலங்கையில் பல துன்பங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் உயிராபத்திலிருந்து தப்பிக்க நாட்டிலிருந்து வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் கோருவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் பல நாடுகள் அகதிகள் தொடர்பான தமது கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Facebook Comments