இலங்கை அரசு தொடர்ந்து சிவில் பதவிகளுக்குப் படையினரை நியமிக்கும் போக்கு நாடு இராணுவமயமாக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என்று கல்வித்துறையின் முன்னணி தொழிற்சங்கம் ஒன்று எச்சரித்துள்ளது.
பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பிக்க விமானப் படையினர் அமர்த்தப்படவுள்ளனர் என்று கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை விமானப் படையின் தலைவர் சுதர்சன பதிரன வடமத்திய மாகாணத்தில் நடைபெற்ற அரசு விழாவொன்றில் வைத்த இந்த முன்மொழிவை கல்வித் திணைக்களத்தில் செயலர் கபில பெரேரா ஏற்றுக் கொண்டுள்ளார்.
பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கும் போது, விமானப் படையினரின் முன்மொழிவு ஏற்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.
“தற்போதைய அரசு இராணுவ அதிகாரிகளை அரசின் செயலர்களாகவும், நிறுவனங்களின் தலைவர்களாகவும், அண்மையில் அனைத்து 25 மாவட்டங்களிலும் கோவில்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராகவும் நியமித்துள்ளதின் நீட்சியே இந்த நடவடிக்கை“ என்று ஊடக அறிக்கையொன்றில் அதன் பொதுச் செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முதல் தொகுதி விமானப் படையின் ஆடவர் மற்றும் மகளிர் போரினால் பாதிக்கப்பட்ட கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சின் செயலர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கையின் 19 கல்வி நிறுவனங்களில் பயின்று சித்தி பெற்று வெளியேறி தற்போது வேலையில்லாமல்3772 ஆசிரியர்களை கல்வி அமைச்சு பணிக்கு அமர்த்த தவறிவிட்டது என்று அந்த சங்கம் கூறுகிறது.
இது தவிர சிவில் பாதுகாப்புப் படையினர் 80 பேர் கெப்பிட்டிகொல்லாவ கல்வி வலையத்தில் அண்மையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கும் போது விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரியுள்ளது.