நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க நுகேகொடை நீதவான் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்றங்கள் தீரமானித்துள்ளன.
நுகேகொடை நீதிமன்றத்தின் பதிவாளர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் (04) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பிலான வழக்குகள் ஸ்கைப் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு, பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்படுமாயின், அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் சட்டத்தரணிகள் ஸ்கைப் ஊடாக நீதிமன்றத்தை தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தினமொன்றில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய வழக்குகளில், பிணை கோரிக்கை விடுக்கப்படும் வழக்கு எண், பிணை கோரிக்கை விடுக்கும் சட்டத்தரணியின் பெயர், தொடர்புகொள்ள வேண்டிய ஸ்கைப் பெயர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை, அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தின் ஸ்கைப் கணக்கிற்கு ஒரு குறுந்தகவல் ஊடாக அனுப்பி வைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் ஸ்கைப் ஊடாக தொடர்புடைய சட்டத்தரணிக்கு அனுப்பி வைக்கப்படுமென நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு வரும்போது, சட்டத்தரணி வழங்கிய ஸ்கைப் கணக்கின் ஊடாக நீதிமன்றம் அவரை தொடர்புகொள்ளுமென நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்களை கைது செய்து நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தும் நாளாந்த நடவடிக்கையின்போது, சந்தேகநபர்களை தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கும் சட்ட நோக்கத்திற்காக மாத்திரமே நீதிபதி சந்தேகநபர்கள் குறித்து ஆராய்வார் எனவும், வழக்கு விசாரணையில் வாதி மற்றும் பிரதிவாதியின் கூற்றுக்களை ஸ்கைப் ஊடாக மாததிரமே பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வழக்கில், ஒரு சட்டத்தரணி பிணை மனுவை தாக்கல் செய்ய வேண்டுமெனின், சந்தேகநபரின் பெயர் மற்றும் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தும் பொலிஸ் நிலையத்தின் விபரங்கள், சட்டத்தரணியின் பெயருடன் ஸ்கைப் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சட்டத்தரணியை நீதிமன்றம் ஸ்கைப் வழியாக தொடர்பு கொள்ளும்.
ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தை தொடர்புகொள்ளும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு பொருத்தமான ஆடை அணிந்திருக்க வேண்டுமென, நுகேகொடை நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்படாவிடின் ஸ்கைப் வழியாக வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள.