சட்டக் கலலூரி கற்கை நடவடிக்கைகளை ஆங்கில மொழி மூலம் நடத்துவதை கட்டாயமாக்குவதன் மூலம் நாட்டின் இன பன்முகத்தன்மைக்கு அரசாங்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினமான கடந்த 21ஆம் திகதி, சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன ”தமிழ் சிங்கள சட்ட மொழிகளிடையே பாகுபாடு காட்டாதீர்கள்” என்ற வாசகத்துடன் பதாதைகளை காண்பித்தவாறு நீதி அமைச்சின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பிரச்சாரத்தில் ஈடுபடும் காட்சி ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவாகியுள்ளது.
நீதி அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் 30.12.2020 அன்று சட்டக் கல்வி சபை வெளியிட்டுள்ள 2208/13ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, சட்டக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் மொழி ஆங்கிலம் என்பதோடு, ஆங்கிலத்தில் பரீட்சைகளை நடத்துவதும் கட்டாயமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.
“இந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட சந்தர்பத்தில், ஒருங்கிணைந்த சட்டக் கல்வி சபை, நீதித்துறையின் மொழி அல்லது சட்ட மொழி தொடர்பான அரசியலமைப்பின் இரண்டு விதிகளை அல்லது பிரிவு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு விதிகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டுள்ளது”
இலங்கையின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகள் சிங்கள மற்றும் தமிழ் என சட்டத்தரணி சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை அந்த இரண்டு மொழிகளில் நடத்துவதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் மாத்திரமே நடத்த அனுமதிப்பதன் மூலம், இலங்கையின் நீதிமன்றங்களில் சட்ட மொழியில் வழக்குகள் எவ்வாறு விசாரிப்பது என்ற, கடுமையான நெருக்கடி எழுந்துள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், நீதித்துறை அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மொழியில் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே சட்டக் கல்வி வழங்கப்பட வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வியில் பொது மக்களின் சட்ட மொழி உரிமையை இல்லாமல் செய்யும் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி சபை மற்றும் நீதியமைச்சின் உத்திகள், இலங்கை நீதித்துறை சட்டக் கல்லூரியை நிறுவுவது குறித்து மக்களை தெளிவுபடுத்தல், குறித்த ஒரு இலட்சம் துண்டு பிரசுரங்களை வெளியிடுவதற்கான செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளராக சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன செயற்படுகின்றார்.