ஜேர்மனியிலிருந்து தமிழர்கள் சிலர் வெளியேற்றப்படும் அபாயம்

0
Ivory Agency Sri Lanka

ஜேர்மனியில் நீண்ட காலமாக வசிக்கும் ஒரு தொகுதி இலங்கைத் தமிழர்கள் இம்மாதம் 30ஆம் திகதி சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னேற்பாடாக பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் மனித உரிமைகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடைபெறும் கைதுகளில் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிற தகவலை உறவினர்கள் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணங்களின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்கிற விபரங்கள் எல்லாமே இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வகையில் கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் டூசல்டோர்பிலும், 50 பேர் பிராங்கபர்ட்டிலும், 11 பேர் ஸ்டுட்கார்ட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த மனித உரிமைக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அந்த அமைப்பு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மேற்குலக நாடுகள் தீவிரமாக ஆதரித்தன.

இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள், போர்க்காலத்தில் இடம்பெற்றவைகளுக்குப் பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவை குறித்து அந்தத் தீர்மானம் பேசியது.

ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஜேர்மனி இப்படியான சுற்றி வளைப்பு, கைதுகள், நாடு கடத்தும் எண்ணங்கள் ஆகியவை அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றன என்று விமர்சகர்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் விடயத்தில் மேற்குலக நாடுகளின் `இரட்டை முகம்` இதன் மூலம் வெளியாகியுள்ளதாக என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரு புறம் இலங்கையில் மனித நிலைமைகள் மோசமாகவுள்ளன, பன்னாட்டு விசாரணை தேவை, மத மற்றும் கலாச்சார உரிமைகள் நசுக்கப்படுகின்றன, நில அபகரிப்புகள் தொடருகின்றன என்றெல்லாம் சர்வதேச மட்டத்தில் மேற்குலக நாடுகள் ராஜபக்சக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றன.

ஆனால் நாட்டிலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக உயிருக்கு அஞ்சி பல நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது எனும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் அமைப்புகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் சர்ச்சைக்குரிய குடியேற்றம் தொடர்பான சட்டம் ஒன்றை ஜேர்மனிய அரசு கொண்டுவந்தது.

அந்தச் சட்டம் ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த வழி செய்கிறது. அதுமட்டுமின்றி அந்தச் சட்டம் காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

கடந்த ஜனவரி 29ஆம் திகதி ஜேர்மன் அரசின் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையர் பாபேல் காப்லர் அரசை தனது ட்விட்டரில் பாராட்டியிருந்தார்.

“நேற்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் – இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் குறித்து பாரதூரமான கவலைகளை அளிக்கிறது -என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி தொடர்ந்தும் இணக்கப்பாடு பொறுப்பு கூறுதல் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும், மேலும் ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கும் இது தொடர்பில் ஜேர்மனி ஆதரவளிக்கிறது என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

இப்படியான பின்புலத்தில் ஈழத் தமிழர்கள் சிலரை ஜெர்மனியிலிருந்து வெளியேற்றும் முடிவு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்ச்சி மற்றும் மேற்குலக நாடுகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க பன்னாட்டு விசாரணையாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிய ஜெர்மனி, அதேவேளை நூற்றுக்கும் அதிகமானவர்களை இலங்கைக்கு நாடு கடத்துகிறது.

“இது தான் ஜேர்மனியில் மனித உரிமைகள் தொடர்பிலான நிலைப்பாடா”? என அந்த அமைப்பு கேள்வி ஒன்றையும் முன்வைத்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் அல்லது பன்னாட்டு அமைப்புகள் இது தொடர்பாக ஒரு கானொளியையோ அல்லது எழுத்து மூலமான ஒரு அறிக்கையையோ தமது விரைவாக அனுப்புமாறு ஜேர்மன் மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் சங்கம் கோரியுள்ளது.

இதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதமொன்றை ஜேர்மன் அரசுக்கு எழுதியுள்ளார்.

அதில் இந்த விடயம் தமக்கு ஆழ்ந்த கவலையளிப்பதோடு, இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு அமைப்புகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

ஜேர்மன் அரசு இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

Facebook Comments