இலங்கையின் தென்பகுதியில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
2015க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் 10ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளது.
கறுப்பு நிற வாகனத்தில் இணையதள ஊடகவியலாளரான சுஜீவ கமகே என்பவர் கடத்தப்பட்டு, அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2015க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் 10ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடத்தல்களை “மீண்டும்” தொடங்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
சுஜீவ கமகேவிடம், அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்காக குரல் எழுப்புவதில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் காணப்படாமை கவலையளிப்பதாக, முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிஹல்பொல வீதி, உடவலவத்தையில் வசிப்பவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடத்தப்பட்ட பின்னர், அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று, கொடூரமாக சித்திரவதை செய்து அடித்து, அவரது கை மற்றும் மார்பு பிரதேசங்கள் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தரவுகளை சேமித்து வைக்கும் இரண்டு பென் டிரைவ்கள் உட்பட அவர் வசம் காணப்பட்ட அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட ஊடகவியலாளர் சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.