விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழப்பு

0
Ivory Agency Sri Lanka

தடுப்புக் காவலில் வைத்து தாக்கப்பட்டதாக நம்பப்படும் வடக்கின் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கீழ் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தடயவியல் நிபுணர் ருத்ரபசுபதி மயோரதன் தெரிவித்தமைக்கு அமைய, இறந்த இளைஞனின் முதுகு, கை மற்றும் கால்களில் பல காயங்கள் காணப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் தடுப்புக்காவலில் இருந்த போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய முறையில் தலையிடவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்பவர் நவம்பர் 8ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 10 ஆம் திகதி, நாகராசா அலெக்ஸின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது மகனை விசாரணைக்காக பொலிசாரால் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

நவம்பர் 10ஆம் திகதி பொலிசார் நாகராசா அலெக்ஸ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், சந்தேகநபரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நாகராசா அலெக்ஸ் உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, வைத்தியசாலையில் அவரை பார்வையிட வந்த உறவினர்களிடம் தன்னை பொலிசார் சித்திரவதை செய்ததை நாகராசா அலெக்ஸ் விபரித்ததை உறவினர் ஒருவர் கைத்தொலைபேசி காணொளி பதிவு செய்துள்ளார்.

“பொலிஸ் சந்தேக வழக்கில் கொண்டுச் சென்று அடித்தனர். களவு போயுள்ளதாக சொல்லி அடித்தார்கள். பின் பக்கத்தால் கட்டிப்போட்டுட்டு, முகத்தை துணியால் கட்டிப்போட்டு தண்ணியை ஊற்றி ஊற்றி அடித்தார்கள். கொஞ்சமாகத்தான் சாப்பிட தந்தார்கள். அடித்துவிட்டு விட்டார்கள். ஒரு கயிற்றினால் கட்டி அடித்தார்கள். கேட்டு கேட்டு அடித்தார்கள் நான் இல்லை என்றேன். பையில் பெற்றோலைத் தடவி அடித்தார்கள். நான் மயங்கிப் போனேன். இரண்டு கைகளையும் தூக்க இயலாது. முதலில் சாப்பாடு தரவில்லை. அடுத்தநாள் தான் சாப்பாடு தந்து அவர்களின் அறையில் கொண்டு சென்று, எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். அடுத்தநாள் என்னை அச்சுறுத்தினார்கள். சாராயம் குடிக்கத் தந்தார்கள். ஒரு பெக்,” என நாகராசா அலெக்ஸ் காணொளியில் கூறியுள்ளார்.

Facebook Comments