பலவீனமான வழங்கல் காரணமாக ஆய்வக சேவை தோல்வியின் விளிம்பில்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த தேவையான அறிவியல் தரவுகளை வழங்கும் ஆய்வக சேவை, விநியோக முறையின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தோல்வியடையும் அபாயத்தில் இருப்பதாக வைத்திய ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மூன்றாவது கொரோனா அலையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆய்வக சேவைகளை செயலிழக்கச் செய்வதும், அதை முறையாகப் பயன்படுத்தத் தவறுவதும், ஒரு தேசமாக திருத்த முடியாத பிழையை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலையை தோற்றுவிக்கும் என என்று அரச வைத்திய ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் ரவி குமுதேஷ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கொரோனா அலையின் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு, ஆய்வக சேவையின் குறைபாடுகள் மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிசிஆர் இயந்திரத்தில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக ஒரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் கொரோனா ‘நேர்மறை’ என காட்டும் நபர் ஒருவருக்கு மற்றுமொரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் எதிர்மறையை காட்டும் அபாயம் காணப்படுவதாக அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, அரசாங்க ஆய்வக அறிக்கைகள் மீது பொதுமக்களின் நம்பிக்கை இல்லாமல் போகும் பட்சத்தில், கொரோனா தொற்றுநோய் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ரவி குமுதேஷ் ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஆய்வக சேவையின் நம்பகத்தன்மையை மேலும் பாதுகாப்பதற்கும் ஆய்வக சேவையில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய குழுவை அமைக்குமாறு ரவி குமுதேஷ் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இல்லையென்றால், இந்த திட்டங்களை புறக்கணிக்கும் அதிகாரிகளே, ஆய்வக சேவையில் எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு காரணம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச வைத்திய ஆய்வக நிபுணர்கள் சங்கத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்கள் சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பதில் பணிப்பாளர் நாயகம் ஆய்வக சேவைகள்), பதில் பணிப்பாளர் நாயகம் (மருந்து பொருட்கள்) பணிப்பாளர் (ஆய்வக சேவைகள்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாக ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள் எண்ணிக்கை

ஏப்ரல் 29, வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரையான புள்ளிவிபரங்களுக்கு அமைய, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 484 என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை ஒரு நாளில் பதிவான அதிக தொற்றாளர்கள் எண்ணிக்கையான ஆயிரத்து 531 நேற்றைய தினம் பதிவானது.

தற்போது வைத்தியசாலைகளில் 10 ஆயிரத்து 372 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 667 ஆகும்.

வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments