கர்ப்பிணித் தாய்மார் குறித்து விசேட வைத்திய எச்சரிக்கை

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரொனா வைரஸின் புதிய திரிபுகளிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் எடுத்துரைத்துள்ளனர்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு குழுவாக கர்ப்பிணித் தாய்மார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“கர்ப்பிணித் தாய்மார்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்களெனின், அவர்களைப் பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லைவிடின் இது மிகவும் துன்பகரமான விடயமாக மாறலாம்” என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் தலைவர் விசேட வைத்திய நிபுணர், பிரதீப் டி சில்வா புதன்கிழமை (28) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான விடயமாக மாறியுள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பொதுவான சிக்கல்கள் நோய் பரவுவதற்கான பொதுவான காரணிகளாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் பொதுமக்களுடன் நேரடியான தொடர்புகள் ஏற்படுவதாலும், அதிக ஊழியர்கள் உள்ள இடங்களில் பணியாற்றுவதாலும், தொற்றுநோய் பரவுவதற்கு இது வாய்ப்பாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“Royal College of Obstetricians and Gynaecologists” என்ற பிரித்தானிய அரச நிறுவனம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதை பரிந்துரைத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் கருதுகிறது.

இந்த தடுப்பூசி கருவுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா கூறியுள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை பரிசோதிக்க வேறொரு இடத்தை வழங்குவது முக்கியம் எனவும், இல்லாவிடின் சாதாரண நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments