என் வீட்டுக்காரர் என்ன அடிக்கிறது ஒன்னும் புதுசு இல்ல, அவருக்கு என்ன அடிக்க காரணம் எல்லாம் தேவயில்ல, குடிச்சிருந்தாலே போதும்” என்கிறார் தலவாக்கலையைச் சேர்ந்த 40 வயதுடைய வள்ளியம்மை. ”எங்கப்பா எங்க அம்மாவ அடிப்பாரு, நான் போய் தடுத்தா என்ன அடிப்பாரு. அவரெல்லாம் மனுசனே இல்ல. நான் என்ன படிக்கிறேன், எந்த கிளாஸ் (தரம்) எதுவும் அவருக்குத் தெரியாது” என்கிறார் சில்வர்கண்டியைச் சேர்ந்த 15 வயது சிவானி.
“உலகிலேயே மிகவும் பொதுவான வீட்டு வன்முறை மனைவியை அடிப்பதாகும்” என 1989ஆம் ஆண்டு, மானுடவியலாளர் டேவிட் லெவின்சன் (David Levinson) யாலே பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிப்படையில் கருத்து வெளியிட்டார். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெவின்சன் வெளியிட்ட இந்த கருத்து இன்றும் பொருத்தமென்றால் அது மலையகப் பெருந்தோட்டமாகத்தான் இருக்கும். பொதுவாகவே பெருந்தோட்டங்களில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்துவிட்ட, நாளாந்தம் இடம்பெறுகின்ற ஒரு விடயமாக மாறிப்போயுள்ளது இந்த ”வீட்டு வன்முறை”
வீட்டுக்கு வீடு வாசல்படி என்பார்கள், உண்மைதான் உலகில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, எனினும் அந்தப் பிரச்சினைகள், அந்தக் குடும்பத்தில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் கலந்தாலோசனைகள், அறிவுரைகள் ஊடாக தீர்க்கப்படும். அல்லது பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்பு தமக்குள் பேசி ஒரு தீர்வுக்கு வந்துவிடுவார்கள். இதுவே நடைமுறை. எனினும் மலையக பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் இது சற்று மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக ஆண்டான் அடிமை சமூகத்தைப் போல, பெண்கள் அனைவரும் அடிமைகள் என்பது போலவும், ஆண்கள் அனைவரும் ஆளப் பிறந்தவர்கள் அல்லது அதிகாரத்தின் ஊடாக அடக்கியாளும் உரித்துடையவர்கள் என்பதுபோலவும் ஒரு தோற்றப்பாட்டை காட்டி நிற்கிறது.
பெருந்தோட்டங்களில் வாழும் பெண்களில் 90 வீதமானவர்கள் ஏதோ ஒரு வகையில் குடும்பத்தில் உள்ள ஏதோ ஒரு ஆணின் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றால் என்பது எம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். ”ஏன் புருஷன்கிட்ட நான் கல்யாணம் கட்டுன நாள்ல இருந்து எவ்வளவோ அடி வாங்கியிக்கிறேன். என்னாப் பண்றது விதி” என்கிறார் ஹைபொரஸ்ட் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது மனோன்மணி. ”எங்க அப்பா சும்மா ஏதும் கேட்டாலே அடிக்க வருவாரு. இல்லனா கெட்ட வார்த்தையில ஏசுவாரு” என்கிறார் இராகலையைச் சேர்ந்த 23 வயது மேகலா. வன்முறை அல்லது சித்திரவதை எனப்படுவது தாக்குதல் மூலமாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல, வார்த்தைகள் மூலமாகவும் ஏற்படுத்தப்படலாம் என்பதற்கு மேகலாவின் கதை சிறந்த உதாரணம்.
”அப்பா டெய்ல்லி (தினமும்) குடிச்சிட்டு வந்து ஒன்று அடிப்பாரு இல்லனா சும்மா கத்திகிட்டு இருப்பாரு, அதான் கொழும்புல ஒரு வீட்டுக்கு வேலக்கி வந்துட்டேன். இங்க வந்தா எனக்கு இரவும், பகலும் ஓய்வில்லாத வேல என்ன செய்றது. அப்புறம் ஒரு பொடியன விரும்பி கல்யாணம் முடிச்சேன். அவரு என்னான ஒரு வருசம்தான் நல்லா இருந்தாரு, அப்புறம் வீட்டுல சாமான் இல்லனு சொன்னாக்கூட அடிக்கவாறாரு” என்கிறார் உடபுஸ்ஸாவையைச் சேர்ந்த விக்னேஸ்வரி. இவ்வாறு ஆயிரக்கணக்கான விக்னேஸ்வரிகள், மேகலாக்கல், மனோன்மணிகள் இன்னமும் ஏதோ ஒரு வகையில் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இலங்கையிலும், உலகத்திலும்
இலங்கையில் பெண்கள் வெளிநபர்களைவிட, தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இரு மடங்கு உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவிக்கின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதலாவது தேசிய கணக்கெடுப்பு (2020) மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. “தயவுசெய்து நாங்கள் வாழும் நரகத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்” என கணக்கெடுப்பில் பங்கேற்ற ஒரு பெண் ஒரு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக தாம் தாக்கப்படுவதாக, நாட்டின் சில மாவட்டங்களில் வாழும் 54 வீதமான பெண்கள் (மனைவிமார்) தெரிவித்துள்ளனர்.
அறிக்கைக்கு அமைய, பொருளாதார மற்றும் சமூக மட்டத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள், துணைவர் மற்றும் குடும்ப ஆண்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஐந்து வாழ்க்கைத் துணைகளில் ஒருவர், (விகிதாசார அடிப்படையில் 20.4 வீதமான பெண்ள்), தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் கணவரால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார். அதே நேரத்தில், 10 பெண்களில் ஒருவர், (விகிதாசார அடிப்படையில் 7.2 வீதமானவர்கள்), நெருக்கமானவர்கள் அல்லாதவர்களின் கைகளால் உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். 24.9 வீதமான பெண்கள் துணைவர் மற்றும் உறவினர் அல்லாதவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது. உறவில் இருக்கும் 18.8 வீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் உறவில் இருந்தவர்களால் ஒருவித உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண் உடலியல் அல்லது பாலியல் வன்முறையை அவளின் வாழ்நாளில் ஒரு தடவையாவது அனுபவிக்கிறாள், பெரும்பாலும் பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாக கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் கணிக்கப்பட்ட பெறுமானம், ஐந்தில் இரண்டு பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காயங்கள், உடல், மன, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், எச்.ஐ.வி மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் மனநல பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகளைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெருந்தோட்டங்களில் அதிகரித்த வீட்டு வன்முறை
பெருந்தோட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குடும்ப வன்முறை எனப்படுவது கண்டுகொள்ளப்படாத அல்லது என்ன செய்வது இதுதான் விதி என்ற வகையில் கடந்து செல்லும் நிலைமை அதிகம் என்கிறார் மலையகத்தில் செயற்படக்கூடிய ”மீனாட்சி பெண்கள் அமைப்பின்” உறுப்பினர் ஒருவர். மலையகத்தில் பெரும்பாலும் தந்தையால், கணவரால் தாக்குதலுக்கு உள்ளாகும் பலப் பெண்கள் இது இயற்ககையான ஒரு விடயம் என்பதுபோல் சகித்துக்கொள்கின்றார்கள். இரவில் சண்டையென்றால் விடிந்ததும் அப்படி ஒரு விடயம் நடைபெறவே இல்லை என்பதுபோல், தன்னைத் தாக்கி சித்திரவதை செய்தவருடன் எவ்வித முரண்பாடும் இல்லாமல் சகஜமாக பேசும் தன்மை அதிகம். வீட்டு வன்முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார் அவர். ”உள்ளம் சார்ந்து மலையகத்தில் இடம்பெறும் வன்முறைகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.” என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கின்றார். குறிப்பாக தகாத வார்த்தைப் பிரயோகம் போன்ற விடயங்களை மிகச்சாதாரணமாக அவர்கள் கடந்து செல்கிறார்கள்.
ஏன், ”மலையகத்தில் கர்ப்பகாலத்தில் பெண்கள் அடி, உதை வாங்கிய சம்பவங்களை கண்ணால் கண்டிருக்கின்றேன்” என்கிறார் பல்கலைக்கழக மாணவியும், பெண்கள் உரிமை சார்ந்து செயற்படுபவருமான நுவரெலியாவைச் சேர்ந்த தயானி. ”கர்ப்பகாலத்தில் தனது மனைவியை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற அடிப்படை அறிவுக்கூட பலருக்கு இல்லை என்கிறார் அவர்” இதுவும் ஒருவித உரிமை மீறலே.
”குறைந்த கல்வியறிவு வீட்டு வன்முறைக்கு மிகப் பிரதான காரணமாகும், எது சரி, எது பிழை என்பதை பிரித்தறியும் ஆற்றல் குறைவு, என் தந்தை என் தாயை (பல வருடங்களாக) பல முறை அடித்திருக்கின்றார். ஆகவே என் மனைவியை நான் அடிப்பதில் தவறில்லை” என்ற மனநிலை இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது என்கிறார் தயானி. ”என் தாய் இத்தனை வருடங்களில் என் தந்தைக்கு எதிராக பொலிஸிலோ வேறு எங்குமே முறைப்பாடு செய்ததில்லை, ஆகவே என் மனைவியும் செய்யமாட்டார்” என்ற நம்பிக்கை காரணமாக இது சாதாரண விடயம் என்பதுபோல் தொடர்கிறது.
மலையகத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு கஷ்டங்கள் காணப்படுவதால், தங்கி வாழும் பெண்களின் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிடுகிறது. கணவர் தொழிலுக்குச் செல்வதால், மனைவியை ஒரு அடிமைப்போல நடத்துவதை இன்றும் கண்ணால் காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ”அடிச்சாலும், திட்டுனாலும் அவர்தானே ஒழச்சிக்கிட்டு வாரார்” என மனைவிமார் பெருமை பேசுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆகவே உழைக்கும் கணவர்மார் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற எண்ணம் வீட்டு வன்முறைக்கு மிக முக்கிய காரணம். அதிலும் அவர்கள் பேசும் ஒரு விடயம் ”வீட்டுல சும்மாதானே இருக்க” வீடடில் உள்ள பெண்களுக்கு இருக்கும் வேலைகள், பொறுப்புகள் தொடர்பில் அவர்களுக்கு எவ்வித தெளிவும் இல்லை.
அண்மைக் காலத்தில், நுண்கடன் பல குடும்பங்களின் நிம்மதியை கெடுத்துள்ளது என்கிறார், மீனாட்சி பெண்கள் அமைப்பின் மற்றுமொரு செயற்பாட்டாளர். கடனைப் பெற்ற பின்னர் கணவன் – மனைவி இணைந்து மிக இலகுவாக செலவு செய்து விடுகிறார்கள். எனினும் திருப்பிச் செலுத்தும் பொறுப்பினை மனைவி தனியாக சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே இதில் ஏற்படும் முரண்பாடு, இறுதியில் சண்டையில் முடிகிறது. அங்கும் அடி வாங்குவது பெண்ணாக மாறிப்போகிறாள்.
தடுப்பதில் உள்ள சிக்கல்கள்
வன்முறை அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு மிகப்பிரதான காரணம் பாதிக்கப்பட்டவர்கள் முன்வராமையே என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. குறிப்பாக பெருந்தோட்டங்களில் இடம்பெறும் வீட்டு வன்முறைகளை ஒரு பொருட்டாகவே யாரும் கருதுவதில்லை. இது ஏதோ வழமையாக இடம்பெறும் ஒரு விடயம் என்பதுபோல் பாதிக்கப்பட்ட பெண்கள் மாத்திரமல்ல அவளைச் சார்ந்து உள்ளவர்களும் மிகச்சாதாரணமாக அதனை கடந்து செல்வதால் இதனை தடுப்பது குதிரைக் கொம்பாக மாறிப்போகிறது என்கிறார் மீனாட்சி பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால், அவருக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்) குறிப்பிட்டு, அவருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை. இது குற்றவாளிகளுக்கு ஒருவித அசட்டு தைரியத்தை தந்துவிடுகிறது என்கிறார் சட்டத்தரணி சிவா மேலும், சட்ட அமுலாக்க அதிகாரிகளும் மற்றும் குற்றத்தை புரிந்தவர்களும், நீதி கட்டமைப்பும் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனைவிட காலம் கடந்த நீதியும் மற்றுமொரு காரணம் என்கிறார் அவர்.
”நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு பெண்ணுக்கு நீதிகேட்டு நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்ற நிலையில், எங்களுக்கு எதிராக பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். அச்சுறுத்தல் விடுத்தார்கள்” இவ்வாறு குற்றம் புரிந்தவர்கள் தமது அரசியல் செல்வாக்கு அல்லது சட்ட அமுலாக்க அதிகாரிகளுடனான தொடர்புகளை பயன்படுத்தி நீதியிலிருந்து விடுபடுவதும் பொதுவான செயலாகவே காணப்படுகிறது என்கிறார் அவர்.
இவை எல்லாவற்றையும் விட, பாதிக்கப்பட்டவர்கள் தாம் வன்முறைக்கு உள்ளாகியிருக்கின்றோம் என்பதைக்கூட அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அதனை தெளிவுபடுத்தும் போது எங்களையே அவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்கிறார் தயானி. குறிப்பாக, தமிழர்களின் குடும்ப விடயங்கள் அதிகமாக இரகசியமாக பாதுகாக்கப்படுவதுடன் தனிப்பட்ட ரீதியில் பேணப்படுகின்றன. இது தமிழர்கள் கடைபிடித்துவரும் நம்பிக்கையாக காணப்படுகின்ற போதிலும், இது பாரிய சமூக பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. பிரதானமாக பெண்கள், வீட்டில் உள்ள ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்ற (எல்லா விடயங்களிலும்) ஒருவித பிற்போக்கு சிந்தனை பிரதான காரணமாக அமைந்துள்ளது.
சட்ட ரீதியாக இவ்வாறான விடயங்களை அனுகுவதில் உள்ள தெளிவின்மை. வழிகாட்டல்கள் இன்மை வன்முறை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர், தந்தை அல்லது யாரோ ஒருவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அவர்களை இந்த சமூகம் விமர்சிக்கிறது. தவறான கோணத்தில் அவர்களைப் பார்க்கிறது. ஏன் இவ்வாறான பெண்களின் நடத்தையைக்கூட எவ்வித அடிப்படை காரணமும் இன்றி தவறாக பேசிய சம்பவங்கள் அதிகம். இந்த நிலைமை வன்முறைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடிவாளமாக மாறுகிறது.
சட்டத்தால் தடுக்க முடியும்
பலாத்காரம், துஷ்பிரயோகம் இரண்டு குற்றங்களையும் இணைத்து இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவை 345 பிரிவு பெண்களுக்கு எதிரான இம்சைகளை தடுப்பதற்காகவே இயற்றப்பட்டது. வார்த்தைகளாலோ அல்லது செயலினாலோ பாலியல் உள்ளிட்ட தொல்லைகளை புரிபவரை குற்றவாளியாக்கும் அதிகாரம் இச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
”குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் ஊடாக வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண், வன்முறையை ஏற்படுத்திய நபருக்கு எதிராக பொலிஸில் சென்று முறைப்பாடு செய்ய முடியும் அதன் பின்னர், இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு அதிகமாகக் காணப்படும் பட்சத்தில் வன்முறையை செய்தவரை கைது செய்வார்கள், இல்லாவிடின் முறைப்பாட்டிற்கு அமைய இதுத் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்கிறார்” சட்டத்தரணி மொஹமட் நசீர்.”வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, குறித்த நபரால் குறித்த பெண்ணுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்ற தீர்மானத்தில் அவரை 40 நாட்கள் குடும்பத்திலிருந்து விலகியிருக்குமாறு நீதிமன்றம் அறிவிக்கும். அதன் பின்னர் இரு தரப்பு நியாயங்களின் அடிப்படையில், அவர் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில், அவருக்கு ஒரு வருட காலத்திற்கு அல்லது நீதிமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் குடும்பத்துடன் தொடர்பற்று இருக்கு உத்தரவு கிடைக்கும். இந்த காலத்தில் குறித்த பெண்ணுக்கு எந்த விதத்திலும் தொந்தரவுகள், தொல்லைகள் தரக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிடும். மேலும் பிள்ளைகள் இருந்தால் அவர்களின் நலன் தொடர்பில் இவருக்கும் பொறுப்பு காணப்படுவதை நீதிமன்றம் அறிவுறுத்தும். அதன் பின்னர் அவர்களை பிரச்சினைகள் இன்றி சேர்ந்துவாழ நீதிமன்றம் அனுமதிக்கும்.” என்கிறார் சட்டத்தரணி
”அதனைவிட பெண்கள் உரிமை சார்ந்து இயங்கும் அமைப்புகள் ஊடாகவும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சட்ட முறைமைக்கு அமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். எனினும் முறைப்பாட்டாளர் பெண் சார்பானவராக இருப்பார்.” என்கிறார் மொஹமட் நஸீல் சட்டத்தரணி.
”அதனைவிட பொலிஸுக்கு செல்லாமல், சட்டத்தரணி ஊடாக தனிப்பட்ட ரீதியில் நேரடியாக சட்டத்தரணி ஒருவர் ஊடாக விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும், இந்த விண்ணப்பத்திற்கு அமைய நியாயமான காரணங்கள் காணப்படுமிடத்து, குறித்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பிக்கும், அதன் பின்னர் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என மற்றுமொரு வழித் தொடர்பில் தெளிவுபடுத்துகின்றார் சட்டத்தரணி மொஹமட் நஸீல்.
மேலும், ”வன்முறைக்கு உள்ளாகும் பெண் ஒருவர் பிரதேச செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஊடாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். குறித்த பெண் அதிகாரியை தொடர்புகொள்ளும்போது, அவர் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்து அதன் ஊடாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடியும். சில வழக்குகளில் குறித்த அதிகாரியே சாட்சியாகவும் செயற்பட்ட சம்பவங்களும் உண்டு.” என்கிறார் சட்டத்தரணி மொஹமட் நஸீல்.
உண்மையில் இந்த அடிப்படையில் நோக்குமிடத்து பெண்கள் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும்போது, பொலிஸார் மூலம் தகுந்த பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பது உறுதியாகின்றது. எனினும் எல்லா பெண்களும் இவ்வாறு பொலிஸில் சென்று முறைப்பாடு செய்கின்றார்களா என்றால், பதில் இல்லையென்றுதான் வரும், ஆகவே பெண்கள் அமைப்பு அல்லது அவசர தொடர்பு இலக்கங்கள் ஊடாக உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
”1938” என்ற அவசர தொடர்பு இலக்கம் மார்ச் 2016 இல் பாதிக்கப்பட்டவர்களை உரிய அமைப்புடன் இணைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பெண்களுக்கான சட்ட உதவிகள் பெண்களுக்கான அரசின் தேசிய அமைப்பினால் வழங்கப்படும். உரிய அமைப்பிற்கு முறைப்பாடு செய்யப்பட்டவுடன் நிலைமைக்கான தீர்வு வழங்கப்படும் வரை உதவிப்பிரிவினால் கண்காணிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Women In Need என்ற அமைப்பானது பெண்களுக்கு அவர்களுடைய அதிகாரங்கள் பற்றி அறிவுறுத்தல், இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது. இதனைவிட ஆங்காங்கே பிரதேசங்கள், மாவட்டங்கள், மாகாணங்கள் என பரந்துபட்ட அளவில் பல பெண்கள் அமைப்புகள் அவர்களின் உரிமைக்காக செயற்படுகின்றன.
சட்ட ஏற்பாடுகள், மகளிர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு வழிகளில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நான் இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்ற தருணத்திலும் மலையகத்தின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பெண் கணவரால், தந்தையால், தன் சகோதரனால் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டிருப்பாள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மனித உரிமை என்ற அடிப்படையில் எந்தக் காரணம் கொண்டும் ஒருவர் மீது ஒருவர் வன்முறைபுரிய முடியாது. மனைவி என்பதாலோ பிள்ளைகள் என்பதலாலோ அவர்கள் ஆண்களால் எவ்வாறும் கையாளப்படக்கூடிய பொருட்டகள் அல்ல. மனித உயிர்கள். அவர்களுக்கான உணர்வும் கௌரவமும் மதிக்கப்படவேண்டும். கணவன் அடித்தால் திருப்பி கேள்வி கேட்டகவோ, அடி வாங்குவதில் இருந்து தப்பித்துகொள்வதற்கோ மனைவிக்கு பூரண உரிமை உண்டு. இன்று பாடசாலைகளில் ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு அடிக்க முடியாது. அதேபோல்தான் குடும்பங்களிலும் எவருக்கு எதிராகவும் வன்முறை செய்ய முடியாது. அது சட்டத்தினால் தண்டிக்கப்படக்கூடியது. அதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன. அவைகள் குறித்த தெளிவு பெருந்தோட்டப் பெண்களுக்கு அவசியம்.
மலையக பெருந்தோட்ட மக்களிடையே காணப்படும் அறியாமை அகற்றப்பட வேண்டும். குறிப்பாக ஆண்கள் பெண்களை அடிமைப்போல் நடத்தும் விடயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும், அதற்கு அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த அடிப்படையான விடயங்கள் குறித்த தெளிவுபடுத்தல் பெருந்தோட்டப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது இலகுவான விடயமல்ல எனினும் கட்டாயம் செய்யப்பட வேண்டும். குறைந்தது அவர்கள் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள் என்ற விடயத்தையாவது புரிந்துகொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டங்கள் தோறும் வன்முறைக்கு எதிரான குறிப்பாக வீட்டு வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பெண்கள் முன்வந்து தமது பிரச்சினையை முன்வைப்பதற்கான ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பல வழிகள் காணப்படுவதை ஆண்களுக்கு தெரியப்படுத்துவதன் ஊடாக இதன் பாரதூரத்தை உணர்த்த முடியும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடும்ப வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனைகள் ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். இவ்வாறான முன்னேற்றகரமான விடயங்கள் செயற்படுத்தப்படும்போது, நிச்சியமாக மகிழ்ச்சித்தரக் கூடிய நல்லபல மாற்றங்களை அவதானிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ச.பார்தீபன்