மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் தலையீடக் கோரி கைதிகள் ஆர்ப்பாட்டம்

0
Ivory Agency Sri Lanka

கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆயுள் தண்டனை அனுபவித்து தம்மை விடுவிக்கக் கோரி ஒக்டோபர் 12ஆம் திகதி கைதிகள் குழு நடத்திய போராட்டம் 22 நாட்கள் கடந்துவிட்டதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்வதால், ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஆய்வு செய்த பின்னர், கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு, கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடவும்” என போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் வைத்திருந்த வெள்ளை நிற பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை விடுவித்ததாக ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்த மறுநாளான செப்டம்பர் 20ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கைதிகளின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்க இயலாது எனக் கூறும் சிறைச்சாலைகள் திணைக்களம், கடந்த மாதம் சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிற்கு கைதிகளின் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

இதன் முன்னேற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பு வெளியிடவில்லை.

கைதிகள் தினத்தையொட்டி சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட 89 கைதிகள் அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 1,500 கைதிகள் வெலிக்கடை செப்பல் வார்டில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றவாளி மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு வழங்கினார்.

துமிந்த சில்வா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டபோது கூட, வெலிக்கடை மற்றும் மஹர உட்பட பல சிறைகளில் உள்ள கைதிகள் குழு அவர்களை விடுவிக்கக் கோரி போராட்டங்களை நடத்தியது.

விடுதலைக்குத் தகுதியான குழுவால் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மாத்திரமே விடுதலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

“எதிர்காலத்தில் அவர்கள் சொக்கா மல்லியையும் துமிந்த சில்வாவையைப் போல் விடுவிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர்கள் அல்ல விடுவிக்கப்பட வேண்டியவர்கள். துமிந்த சில்வா போன்றவர்கள் சிறையில் ஐந்து வருடங்களே இருந்தனர். ஆனால் 20 வருடங்களுக்கு மேல் இந்த சிறையில் பலர் இன்னும் கஷ்டப்படுகிறார்கள் . ”

வயதான கைதிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகள் நீண்ட காலமாக சிறைச்சாலையில் அவதிப்பட்டு வருவதாக நந்திமால் கூறியுள்ளார்.

இந்த கைதிகளை சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் விடுவிப்பதற்கு பதிலாக, கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 19ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடாரெஸை சந்தித்தபோது, சட்ட செயல்முறை முடிந்தவுடன் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்சாட்டு இல்லாமல் சிறையில் இருந்த தமிழ் இளைஞர் கதிர்வேலு கபிலன் அண்மையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைப் பதிவுகளை விசாரணை செய்வதற்காக வருகைந்தந்த ஐரோப்பிய ஒன்றிய குழு இம்மாதம் 5ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளைத் திருத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக, ஒக்டோபர் 4 திங்கட்கிழமை காலை மிரிஹானவில் உள்ள தனது இல்லத்தில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரை சந்தித்த ஜனாதிபதி கூறியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து கவனத் செலுத்தியிருந்தது.

எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியம் கைதிகளை சந்தித்ததா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை தனது ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் சலுகை அல்லது முன்னுரிமை வரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யும், மேலும் சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு உட்பட சர்வதேச மனித உரிமை கடமைகளை செயல்படுத்துவது தொடர்பில் கரிசனை கொள்ளும்.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனங்கள் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் கடந்த 2010 இல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலகை இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறெனினும், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்துமென நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மே 2017இல் இந்த சலுகை மீண்டும் கிடைக்கப்பெற்றது.

Facebook Comments