புதிய மாற்றங்களுடன் பயணத்தைத் தொடரும் இலங்கை மலையக மன்றம்

0
Ivory Agency Sri Lanka

இலங்கை வாழ் இந்திய வம்சாவழி தமிழர்களின் நலன்களுக்காக “மாற்றத்திற்காகவும் பொறுப்பான வளர்ச்சிக்காகவும் எழுச்சிபெறும் மலையகம்” என்ற தொனிப்பொருளுடன் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கிவரும் இலங்கை மலையக மன்றத்தின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மெய்நிகர் மூலம் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தின் பரிந்துரைகள் தேசிய சபையினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதியவர்கள் மக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மலையக மன்றம்‌ ”உறுப்பினர் சேர்க்கையில் எதிர்காலத்தில் ஈடுபடுவதில்லை எனவும், இலங்கையில் வாழும் அனைத்து இந்திய வம்சாவழி தமிழர்களும் இலங்கை மலையக மன்றத்தின் உறுப்பினர்களே” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இனி வரும் காலங்களில் அமைப்பு இயங்கவுள்ளது.

இதுவரை இலங்கை மலையக மன்றத்தில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக தொடர்ந்து இணைந்திருக்கலாம். இந்த உறுப்புரிமை என்பது அங்கத்தவ இலக்கத்திலோ அல்லது உறுப்பினர் என்ற அங்கீகாரத்திலோ அன்றி ஒவ்வொருவரும் சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்று மற்றும் அக்கறையிலேயே தங்கியுள்ளது.

எனவே எமது‌ சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொருவரும் தமது சமூகக்கடமைகளை ஆற்ற முன்வரவேண்டும். இது எமது குழந்தைகள் கௌரவமாக வாழவும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என‌‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாத்திரமே இலங்கை மலையக மன்றத்தின் பொறுப்புக்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பதுடன் ஒருவர் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்வாங்கப்படுவதற்கு அவ்வுறுப்பினர் குறைந்தது ஆறு மாதங்களிற்கு அமைப்புடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டிருக்கவேண்டும் என்பதுடன், அவ்வுறுப்பினரை குறைந்தது மூன்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுத்துமூலம் அமைப்பின் தேசிய சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இலங்கை மலையக மன்றத்தின் பிரதிநிதியாக செயற்பட, அமைப்பு சார்பான கருத்துக்களை வெளியிட மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்பட தேசிய சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழுவில் இடம்பெற்றிருக்கின்ற பதினைந்து பேர் தவிர்ந்த, வேறு எந்தவொரு உறுப்பினரின்‌ அமைப்பு சார்ந்த வெளி செயற்பாடுகளுக்கு இலங்கை மலையக மன்றம் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு தனது பயணத்தை மிக வினைத்திறனாக தொடரும் இலங்கை மலையக மன்றத்தில் பல்வேறு பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு

இதற்கமைய, பொருளாளராக பொகவந்தலாவையைச் சேர்ந்த ரேகா ராஜேந்திரனும், அலுவலகப் பொறுப்பாளராக லூல்கந்துரவைச் சேர்ந்த குமாரவேல் கிருஷாந்தனும், ஆண்கள் பிரிவு பொறுப்பாளராக மாவத்தகமவைச் சேர்ந்த கருப்பையா ஜெயசங்கரும், பெண்கள் பிரிவு பொறுப்பாளராக கண்டியைச் சேர்ந்த சீரங்கன் பவானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி பொருளாளராக கேகாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் மதுஷாலினியும், அவர்களும், ஆண்கள் பிரிவு பிரதி பொறுப்பாளராக மஸ்கெலியாவைச் சேர்ந்த சத்தியவேலு விஜயகாந்தும், பெண்கள் பிரிவு பிரதி பொறுப்பாளராக கண்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக பிரிவு பொறுப்பாளராக வட்டவளையைச் சேர்ந்த ஆதிசிவம் அஜந்தனும், அச்சு மற்றும் வெளியீடு பிரிவுக்கு பொறுப்பாளராக புஸ்ஸலாவைச் சேர்ந்த
செல்வராஜ் மெடோலினாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக, கம்பளையைச் சேர்ந்த வேலுசாமி சத்தியசீலன், ஹோல்புரூக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் தர்ஷிகா, பதுளையைச் சேர்ந்த சந்திரமோகன் நிரோஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments