“மன்னிப்பு கோருங்கள்” பத்திரிகையாளரின் கொலையை நியாயப்படுத்திய சுகாதார அதிகாரிக்கு அழுத்தம்

0
Ivory Agency Sri Lanka

யுத்தத்தின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி மன்னிப்பு கோர வேண்டுமென, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஜூன் 3ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளால் கோபமடைந்த சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்,, “தரம்தாழ்ந்த ஊடகவியலாளர்கள் ஆகவேண்டாம். தரம் தாழ்ந்த ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர்” எனக் குறிப்பிட்டார்.

இலங்கையின் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் போரின்போது கொல்லப்பட்டதோடு, பலர் காணாமல் போயுள்ளதாககுவும், குறிப்பாக ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் கூடுதலான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 44 ஊடகவியலாளர்களின் பெயர்கள் காணப்படுவதோடு, அவர்களில் 40ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அமைப்புகளின் கூட்டணி, ஜூன் 7 திங்களன்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்திற்கு எழுதிய கடிதத்தில் கொல்லப்பட்ட பெரும்பாலான ஊடகவியலாளர்கள் ”தரம்தாழ்ந்த பணிகளை ஆற்றியதாக” வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

“மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீங்குகளுக்கு எதிராக உழைத்தமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஊடகவியலாளர்களை நீங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

வரலாறு முழுவதும் ஊடகவியலாளர்களின் குற்றங்களுக்கு (கொலைகள், காணாமல் போதல், தாக்குதல்கள்) நியாயம் வழங்கப்படாத நிலையில், அவர்களின் செயல்களைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில், அவர்களின் செயற்பாடுகளை திட்டமிட்ட குற்றச்செயல்களாக காட்ட முயல்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், யுத்தத்தின்போது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி, மன்னிப்புக் கோர வேண்டுமென, ஊடக அமைப்புகளின் கூட்டணி சார்பாக @lankafiles ட்விட்டர் அறிக்கைக்கு பதிலளித்துள்ள, சுதந்திர ஊடக இயக்கம், ஊடக அமைப்புகளின் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கை, “போர்க்கால கொலைகளுக்கு பொருந்தாது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ‘போர்க்கால ஊடகவியலாளர்களைக் கொல்வது’ என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை என சுதந்திர ஊடக இயக்கம் சிங்கள மொழியில் இநத விடயத்தை தெரிவித்துள்ளது.

ஜூன் 3 ம் திகதி சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஒரு நிகழ்வைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், அன்றைய தினம் கருப்பொருள் தொடர்பாக தொடர்ந்து கேள்விகளை கேட்ட ஒரு ஊடகவியலாளரை இலக்கு வைத்து, இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக, தமிழ், முஸ்லீம் மற்றும் இளம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய ஆறு ஊடக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஊடக அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி வழங்களின்போது தடுப்பூசி பெறுபவரிடமிருந்து ஒரு படிவத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து
இலங்கையில் எழுந்த சர்ச்சை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியமையே வைத்தியரின் இந்த நடத்தைக்கு காரணமாக அமைந்ததாக, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபெலி மற்றும் தலைவர் கருணாரத்ன கமகே ஆகியோர் வார இறுதியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியபராச்சிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக காட்டிக்கொள்வதன் மூலம் குற்றச் செயல்களால் பலியான ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை குறைத்து மதிப்பிட முடியாது என ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தின் கருத்து மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“நாங்களும், அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கோரும் ஊடக சமூகமும் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்”

‘தரம் தாழ்ந்த பணி” என்பதற்கான வைத்தியரின் வரையறையைப் பற்றி விவாதிக்க தாங்கள் தயாராக இல்லையென வைத்தியர் ஹேமந்த ஹேரத்திற்கு தெரிவிக்கும் ஊடக நிறுவனங்கள், இப்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் அவரது அறிக்கை பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாக வலியுறுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமும், ஊடக சமூகத்திடமும் மன்னிப்பு போருவது பொறுப்பான அதிகாரியின் கடமையாகும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், ஊடகவியலாளர்களின் கொலைகளை நியாயப்படுத்திய சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளரின் கருத்தை மீளப்பெற்றுள்ள அமைச்சு, அது ”வாய்த்தவறி வந்த வார்த்தை” என விளக்கமளித்துள்ளது.

தி மோர்னிங் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிபுணர் ஹேமந்த ஹேரத் இது ”மனித இயல்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments