முஸ்லிம் கவிஞர் குறித்த வழக்கு சட்டமா அதிபர் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது

0
Ivory Agency Sri Lanka

கவிதைத் தொகுப்பை வெளியிட்டமைக்காக பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லீம் கவிஞரை விடுவிப்பது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரும் மனு மீதான விசாரணை, சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களமோ அல்லது பதிலளிக்க வேண்டியவர்களோ முன்னிலையாகாததால், வழக்கு ஜூலை 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் தமிழ் வாசகர்களால் அஹ்னாப் என நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்த அரச சட்டத்தரணிகள் திகதியை, பதிவு செய்ததாக சட்டத்தரணி சஞ்சய் வில்சன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான “நவரசம்” எனும் நூல் மாணவர்களை ‘தீவிரவாத சித்தாந்தங்களை’ பின்பற்றுபவர்களாக மாற்றும் முயற்சியில் “தீவிரவாத” விடயங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினால் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு, கடந்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் சார்பில் அவரது சட்டத்தரணி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்கு (வழக்கு இலக்கம் SC FRA 114/2021 என்ற) ஏப்ரல் 16ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அஹ்னாஃப் ஜஸீமை விடுவிக்கவும், 10 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்களின் கோரிக்கைகள்

தனிமனித சுதந்திரத்தைத் தடுக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கடந்த மாாதம், ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு இலங்கை அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

வழக்கு விசாரணைகள் இன்றி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகேர ஆகியோர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம் செலுத்திய நிலையில், ஷானி அபேசேகேர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் ஜஸீம் விடுதலை செய்யப்பட வேண்டுமென, கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்பது ஐரோப்பிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர்.

கவிஞர் அஹ்னாஃப் ஜஸீம்ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும்
அல்லது ஒரு விரைவான விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கும், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய குற்றச்சாட்டுகள் விரைவாக தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பல மனித உரிமை அமைப்புகளின் வரிசையில் தாமும் இணைவதாக அந்த நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் தாமதமின்றி மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டுடன் முழுமையாக இணங்க வேண்டும்” என பிரித்தானியா, எஸ்டோனியா, ஸ்பெயின், ஜேர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின், மனித உரிமை தூதுவர்கள் இணைந்து அறிக்கை ஊடாக வலியுறுத்தினர்.

சர்வதேச மனித உரிமைகள் குழு, அஹ்னாப் ஜஸீமின் விடுதலையை ஆதரித்து கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

பென் சர்வதேச அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கை செயல் அமைப்பு, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மையம், சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்ப, பேர்ள் எக்சன் மற்றும் ப்ரிமியுஸ் ஆகிய அமைப்புகள் அதில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments