மஹர சிறைச்சாலையில் கைகால் உடைக்கப்பட்டு கொலை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற போது உயிரிழந்தார் என அதிகாரிகளால் கூறப்படும் இளம் கைதி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பசியால் வாடியிருந்த இளம் கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக கைதியின் பெற்றோரை போன்று கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இருந்த போது கடந்த மே மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்த காவிந்த இசுறு என்ற கைதியின் தந்தையே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிக்க முயன்ற போது இடம்பெற்ற விபத்தில் காவிந்த இறுசு என்ற இளம் கைதி உயிரிழந்தார் என பொலிஸார் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கயிறு ஒன்றின் உதவியுடன் தப்பிக்க முயன்ற போது சுவரில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த இளம் கைதி உயிரிழந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறியிருந்தார்.

தனது மகனின் மரணம் தாக்குதலால் ஏற்பட்டதாக கூறும் தயாரான ஆர்.எம் கருணாவதி, அவரது கைகளும் கால்களும் உடைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நான் கூற வேண்டியது என்னவென்றால் எனது மகன் அடித்தே கொலை செய்யப்பட்டான். நாங்கள் காலையில் சென்று பார்க்கும் போது இரத்தப் போக்கு காணப்பட்டது. தலையின் பின்புறத்தில் பாரிய காயம் இருந்தது. கால்கள் உடைக்கப்பட்டிருந்தன.கையில் பாரிய வெடிப்பு காணப்பட்டது. கை உடைக்கப்பட்டிருந்தது.

மரணமடைந்த தனது மகன் சிறந்த விளையாட்டு வீரர் எனக் கூறும் தயாரான கருணாவதி, பாடசாலை காலத்தில் ஆறு ஆண்டுகள் அவரது செலவை அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தமையும் ஊடக சந்திப்பில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது காவிந்த இசுறு பல நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதாபிமானம் அற்றமுறையில் சித்திரவதை செய்து கைதிகளை கொலை செய்வது, நாகரீகமாக மாறிவிட்டதாகவும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தப்பிக்க முயன்ற போது விழுந்து உயிரிழந்தார் என கடந்த நாட்களில் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது.எனினும் அதில் உண்மை சம்பவம் என்னவென்றால், எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்த சிறைக்கைதி தாக்கப்பட்டு, மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியே கொலை செய்யப்பட்டுள்ளார்.இதுவே சிறைச்சாலைகளில் தற்போது நாகரிகமாக மாறியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனுராதபுரம், குருவிட்ட மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளில் சந்தேகத்திற்கு இடமான பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சிறைவைக்கப்பட்ட காவிந்த இசுறு மே மாதம் 3 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார் என குறிப்பிடும் சுதேஷ் நந்திமால், காவிந்த இறுசு பல நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது உடலை வெட்டும் போது பெருங்குடல் மாத்திரமே காணப்பட்டதுடன், மூன்று அல்லது நான்கு நாட்களாக அவர் எந்த உணவையும் உட்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டுள்ளதாக சுதேஸ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் சூழலில் உரிய வசிப்பிடம் மற்றும் உணவுகள் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டும் சுதேஷ் நந்திமால், உணவு உட்கொள்ளாமல் இருந்த கைதி எவ்வாறு தப்பித்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிந்த இசுறுவின் மரணம் ஒரு கொலை என நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின் போது நிரூபிப்பதற்கான ஆதாரம் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பிடம் உள்ளதாகவும் சுதேஷ் நந்திமால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments