சர்வதேச மனித உரிமை அமைப்பின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ள கோட்டாவின் ஆட்சி

0
Ivory Agency Sri Lanka

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் எதிர்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இதுத் தொடர்பில் சர்வதேச சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதாக உறுதியளித்த 30/1 தீர்மானம் மீளப் பெற்றதிலிருந்து இலங்கையின் புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை அவசரமாக மீறி வருவதாக கவலை தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பெச்லெட், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் குறித்தும் சர்வதேசத்தின் அவதானத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஜெனீவா இணைத் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக சர்வதேச சமூகத்திற்கு அறிவித்தார்.

இருபது ‘பாதகமான விளைவுகள்’

“புதிய அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிருந்து விலகியதிலிருந்து இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை அவசரமாக மீறுகிறது என்று நான் கவலைப்படுகிறேன்” என மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் செப்டெம்பர் 14 நேற்யை தினம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் ஆரம்ப உரையை நிகழ்த்தும்போது தெரிவித்துள்ளார்.

“பிற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட இருபதாம் திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும்.”

மிருசுவிலில் எட்டு தமிழர்களைக் கொலை செய்த ஒரு இராணுவ வீரரை விடுவிப்பது உட்பட, போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு நீதியைத் தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையையும் உயர் ஸ்தானிகர் விமர்சித்துள்ளார்.

“படுகொலைக்கு தண்டனைப் பெற்ற முன்னாள் இராணுவ சார்ஜென்டுக்கு மார்ச் மாதம் மன்னிப்பு; போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளை முக்கிய சிவில் கடமைகளுக்கு அனுப்புதல்; இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில் பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் தடையை ஏற்படுத்துவது மிகவும் எதிர்மறையான போக்குக்கு இட்டுச் செல்கின்றன.”

இலங்கையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் மிச்செல் பெச்சிலெட் பரிந்துரைத்துள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை உளவு பார்த்தல் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய மனித உரிமைகள் பேரயை நான் ஊக்குவிக்கின்றேன்.”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வு ஜெனீவாவில் ஒக்டோபர் 6 வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments