இரண்டு எதிர்க்கட்சிகளும் கதவுகளைத் திறக்கின்றன

0
Ivory Agency Sri Lanka

உறுப்பினர்களை கட்சியிலிருந்து கட்சிக்கு மாற்றுவதற்கான எதிர்பார்ப்பில்
இரண்டு எதிர்க்கட்சிகளும், அதன் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளன.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்கவை மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளுமே இவ்வாறு எதிர்பார்ப்பில் உள்ளன.

கட்சியை விட்டு வெளியேறிய எவருக்கும் கட்சி அதன் கதவுகளை மூடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள்” என விஜேவர்தன வார இறுதியில் கொழும்பில் உள்ள ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது கட்சியின் கதவு திறந்திருப்பதாகக் கூறியதோடு, ஒரு நிபந்தனை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

“ஊழலால் கறைபடியாத மற்றும் பிணைமுறி ஊழலில் பங்கேற்காத எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருக்கும் கதவுகள் திறந்திருக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவரின் சமூக அபிவிருத்தி செயலாளரும், எதிர்க்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ரெஹான் ஜயவிக்ரம ட்வீட் செய்துள்ளார்

ரெஹான் ஜயவிக்ரம கட்சி மாறியதால் அவர் வெலிகம நகரத்தலைவர் பதவியை இழந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கதவுகள் திறந்திருக்கிறதா அல்லது திறந்திருக்கும் கதவுகள் வெளியேற முடியுமா என்பது குறித்து எந்தவொரு கருத்தையும் இரு கட்சிகளும் முன்வைக்கவில்லை.

Facebook Comments