சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கான உரிமையை இலங்கையர்கள் இழந்துள்ளனர்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களில் விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் நிரப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“விண்ணப்பம் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் தெளிவான எழுத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று ஆறு அம்ச துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய விண்ணப்பத்தில் கோரப்பட்ட விடயங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பை மீறியதாக கருதப்படும் இந்த விண்ணப்பம் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் அத்தியாயம் 4, பிரிவு 18 இன் 1 மற்றும் 2ஆம் பிரிவுகளில், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியெனவும், ஆங்கில மொழி இணைப்பு மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தேசிய மொழிகள்” பற்றிய 19ஆவது பிரிவு “சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள்” எனக் கூறுகிறது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மொழிகள் பற்றிய அத்தியாயம் 4, பிரிவு 18 முதல் 25 ஏ வரை விரிவாக இதுத் தொடர்பில் குறிப்பிடுகிறது.
இது “உத்தியோகபூர்வ மொழி”, “தேசிய மொழிகள்”, “நிர்வாக மொழிகள்”, “சட்ட மொழி” மற்றும் “நீதி மொழி” ஆகியவற்றின் வகைப்பாடுகளையும் கொண்டுள்ளது.