தொற்றுநோய் அச்சுறுத்தலில் வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் கட்டார் முதலாளிகள்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகின்ற சூழலில், பல மாதங்களாக ஊதியம் பெறாத நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக உலகின் முன்னணி சர்வதேச மனித உரிமை அமைப்பு, கட்டார் அகாரிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணி வருவாயை ஈட்டுபவர்களில் பெரும்பாலோர் கட்டார் நாட்டிலேயே பணியாற்றுகின்றனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த வருடம் மாத்திரம் சுமார் 203,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 150,000ற்கும் அதிகமானோர் சவுதி அரேபியா, கட்டார், குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களை பெயரிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் கட்டாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் அவல நிலையை அம்பலப்படுத்தும் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருமாறு பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி கட்டார் நாட்டின் முன்னணி ஒப்பந்தக்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள, ”இம்பீரியல் ட்ரேடிங் அன் கன்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தின் குறைந்தது 400 ஊழியர்களுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கட்டார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொழில் அமைச்சின் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளதாகவும், நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டார் அரசு அறிவித்த போதிலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தமக்கு 2020 ஜூன் முதல் சம்பளம் கிடைக்கவில்லை என, கட்டாரில் வீடு மற்றும் அலுவலக துப்புரவாளர்களை பெற்றுக்கொடுக்கும், ”லலிபெலா” நிறுவனத்தின் ஊடாக பணிக்குச் சென்ற எட்டு ஊழியர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்துள்ளனர்.

சம்பளத்திற்கு பதிலாக, லலிபெலா நிறுவனம் ஒரு பணியாளருக்கு 150 கட்டார் ரியால்களை (சுமார் 7,500 இலங்கை ரூபாய்) உணவு மற்றும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கியுள்ளது, எனினு இது ஒரு முறையான நடைமுறையின் கீழ் வழங்கப்படவில்லை.

“எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இந்தப் பணத்தை அனுப்ப முடியாது என்பதால், அவன் பசியில் வாடுகின்றான்” என கென்னியாவைச் சேர்ந்த லலிபெலா நிறுவன ஊழியரான தாய் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தனது நிலைமையை விபரித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களை ஊதிய துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விசாக்களை தங்கள் முதலாளிகளுடன் இணைத்து வைத்திருக்கும், ”கஃபாலா” முறையை ஒழிப்பதாகவும், 2017ஆம் ஆண்டில் கட்டார் அரசாங்கம் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (ILO) அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டுகிறது.

“கட்டார் அரசாங்கம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவாதம் அளிக்கத் தவறியது கட்டாரின் சீர்திருத்தங்களின் வாக்குறுதிகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான அவநம்பிக்கையான இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹம் ஜாவயிட் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் அமைச்சு மற்றும் பொலிஸார் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகவும், எனினும் இதுத் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்

லலிபெலா நிறுவனத்தின் ஊடாக தமக்கு கட்டார் அடையாள அட்டை வழங்கப்படாததால், பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறையின் ஊடாக தங்களுக்கு செலுத்தப்படாத ஊதியம் குறித்து முறைப்பாடு செய்ய முடியாதுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைவதற்கும், வேலைநிறுத்தங்களில் பங்கேற்பதற்கும் கட்டார் சட்டம் தடை விதித்திருந்தாலும், தொழிலாளர்கள் முறையான தீர்வு கிடைக்காத நிலையில், தமது ஊதியத்தை கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்டார் பொலிஸின், குற்றவியல் சாட்சி மற்றும் தகவல் திணைக்களத்தினர், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அச்சுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போராட்டங்களின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நாங்கள் சிறையில் அடைக்கப்படுவோம் என அவர்கள் கூறுகிறார்கள்.”

ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கத் தவறினால், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக, கட்டார் அரசு கடந்த 2018ஆம் ஆண்டு, “தொழிலாளர் உதவி மற்றும் காப்பீட்டு நிதியத்தை” உருவாக்கியது.

எனினும் ”இம்பீரியல் ட்ரேடிங் அன் கன்ஸ்ட்ரக்சன்” மற்றும் ”லாலிபெலா” ஆகிய நிறுவனங்கள் இந்த நிதியை ஊதியம் பெறாத தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Facebook Comments