இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கும், சதொச மனித புதைகுழியில் ஆறு வருடங்களுக்கு முன்னர் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகளை தடயவியல் மானுடவியல் பரிசோதனைக்கு பொருத்தமான மற்றொரு இடத்தில் சேமித்து வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிமன்றம் நேற்று (ஒக்டோபர் 16) அனுமதி வழங்கியுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனித புதைகுழிகள் குறித்த வழக்குகளிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன், வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவலை வெளியிட்டார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 2013ஆம் ஆண்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட 82 சடலங்களின் கார்பன் ஆய்வுக்கு தேவையான மாதிரிகளை புளோரிடாவில் அமைந்துள்ள மானுடவியல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றதாக சட்டத்தரணி குறிப்பிடுகின்றார்.
“ஏற்கனவே மனித எச்சங்களில் இருந்து பகுப்பாய்விற்காக பிரித்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்ற காவலில் இருக்கின்றது. அதனை சீ-14 பரிசோதனைக்காக புலோரிடா மானுடவியல் ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று வைத்தியரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதிமன்றத்தினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.”
சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவிருந்த போதிலும், அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென, சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.
“குறித்த அறிக்கையை எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி தாக்கல் செய்வதாக தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் குறித்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும். அத்தோடு குறித்த மாதிரிகள் சீ-14 பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்கப்படும்.”
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றில் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 82 மனித உடல்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சதொச புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யப்பட வேண்டுமா?
ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கையை தயாரிக்கும் ஆரம்பகட்ட பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை கடந்த வாரம் ஐந்து நாட்களாக மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் துறையின் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ சதொச மனித புதைகுழியை சுற்றி மாதிரிகளைப் பெறுவதற்காக அகழ்வு செய்ததாக சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
“ராஜ் சோமதேவ அவர்களினால் சதோச மனித புதை குழியை சுற்றி நான்கு இடங்களில் பரீட்சார்த்தமாக தோண்டிப் பார்த்து 110 சென்றிமீட்டர் மற்றும் 130 சென்றிமீட்டர் அளவில் கடந்த 8ஆம் திகதி ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.”
தடயவியல் மானுடவியல் பரிசோதனைக்கு உரிய மாதிரிகளை வைப்பதற்கு தற்போது உள்ள இடம் போதுமானதாக இல்லை என, சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹெவகே சார்பில், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சடடத்தரணிகளால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இந்த மாதிரிகளை வேறு பொருத்தமான இடத்தில் சேமித்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
“வைத்தியர் ஹேவகேயினால் பகுப்பாய்வு செய்யப்பட இருக்கின்ற மனித எச்சங்கள், அதாவது இறப்புக்கான காரணம், ஆண், பெண், வயதெல்லை போன்ற விடயங்கள் சம்மந்தமான ஆய்வு செய்வதற்கு forensic anthropology (தடயவியல் மானுடவியல்) ஆய்வினை செய்வதற்கு இட வசதிகள் போதையால் நீதிமன்றத்தில் இருந்து ஒரு கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்டது. அதற்கான கட்டளை நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.”
2018 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் உறுகண்டுபிடிக்கப்பட்டன.
குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது.
ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார்.
அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன.
சதொச மனித புதைகுழி மீண்டும் தோண்டப்பட வேண்டுமா? பாதுகாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னதாக அறிக்கை அளிக்குமாறு பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச ஆகியோரிடம் நீதிமன்றம் கேட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
“அத்தோடு ராஜ் சோமதேவவிடமும் எடுக்கப்பட்ட பிற பொருட்களில் இருந்து அதற்கான காலப்பகுதி என்னவாக இருக்கும் என்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. அத்தோடு மேலதிகமாக சதொச மனித புதை குழியை மீண்டும் அகழ்வு செய்ய வேண்டுமா? அல்லது அதனை பாதுகாக்க வேண்டுமா? என்பது தொடர்பான அபிப்பிராயங்களை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களாலும் சட்ட வைத்தியர் ராஜபக்ச அவர்களினாலும் அறிக்கை ஒன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு,குறித்த பொருட்கள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு கட்டளை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.”