காணாமல் போன 11 பேர் குறித்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக ”வழக்கிலிருந்து விலக வேண்டாம்”

0
Ivory Agency Sri Lanka

இறுதி யுத்த காலப்பகுதியான 2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி அச்சுறுத்தி கப்பம் பெற்ற மற்றும் காணாமல் போக செய்த, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நீக்க வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழு சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13 வருட விசாரணையின் பின்னர், பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் குற்றப்பத்திரிகை மீதான விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், குற்றச்சாட்டுகளை விரைவாக மீளப் பெறுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராபட்சம் காட்டப்படுவதோடு, இது ஒரு அநீதியான செயல் எனவும், கடத்தப்பட்டு காணாமல் போன 11 பேரின் பெற்றோர் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

667 குற்றச்சாட்டுகள், 126 சாட்சிகள் மற்றும் 64 வழக்குக் கோப்புகளுடன், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார ஜயதேவ கரன்னகொடவிற்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாது என சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார இதனை தெரிவித்தார்.

கஸ்தூரி ஆராச்சிலாகே ஜோன் ரீட், அந்தனி கஸ்தூரி ஆராச்சி, ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மொஹமட் சஜித், திலகேஸ்வரம் ராமலிங்கம், ஜமால்டின் டிலான், அமலன் லியோன், ரோஷன் லியோன், கனகராஜா ஜெகன் மற்றும் மொஹமட் அலி அன்வர் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

கடத்தப்பட்ட இளைஞர்களை விடுவிக்க கடற்படை அதிகாரிகள் அவர்களது பெற்றோரிடம் கப்பம் பெற்றமை விசாரணையில் தெரியவந்தது. குற்றப்புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய கடத்தப்பட்டவர்களில் பலர் கொழும்பிலும் ஏனையவர்கள் கடற்படையின் திருகோணமலை கன்சைட் முகாமிலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளாக இருந்த லெப்தினன் கமாண்டர் சம்பத் முனசிங்க, கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான லெப்டினன் கமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்க, புலனாய்வுப் பிரிவு கமாண்டர் சுமித் ரணசிங்க, கடற்படை கப்டன் லக்ஷ்மன் உதயகுமாரமற்றும் புலனாய்வு அதிகாரிகளான லலித் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிட இஹலகெதர தர்மதாஸ, ராஜபக்ச பத்திரணலாகே கித்சிறி, கஸ்தூரிகே காமினி, முத்துவாஹென்நெதி அருண துஷார மெண்டிஸ் மற்றும் முன்னாள் லெப்தினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

“13 வருடங்களாக பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்த நாம் இந்த 14 குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டு நியாயம் நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ள காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் பெற்றோர்கள், இந்த விடயமானது இயற்கையின் கோட்பாடுகளுக்கும் நீதிக்கும் எதிரானது என்பதால், ஆதரவற்ற பாதிக்கப்பட்ட பெற்றோருக்காக, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மீளப் பெறுவதைத் தவிர்க்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூன்று பேரின் தாய்மார் தமது பிள்ளைகளை இழந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஒருமுறை முயற்சித்த நிலையில், தன்னை கைது செய்வதை தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமைய மீறல் மனுவை ஆராய்ந்த நீதிபதிகளான புவனேக அலுவிகார, விஜித் கே.மலல்கொட மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதிமன்றம், அவரை கைது செய்வதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பித்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தன்னுடைய வாடிக்கையாளர் பதவியில் இருந்த காலத்தில் யுத்தத்தின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்ட கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் குறிப்பிட்ட சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஐக்கிய நாடுகள் சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டியதோடு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியனவும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

போரின் போது, தனது வாடிக்கையாளர் விரும்பிய ஒருவரை அவர் கடத்தவோ அல்லது கொலை செய்யவோ வாய்ப்புள்ளது எனவும், அந்த நாட்களில் போர் வலையத்தில் அந்த போர் வீரர்களிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை எனவும், எனினும் இன்றைய சூழ்நிலையில் எவரும் அவ்வாறு செய்ய முடியாது எனவும், குற்றவியல் குற்றச்சாட்டுகளில் “போர் வீரன்” கைது செய்யப்படுவதை “தேசத்திற்கு எதிரான குற்றம்” என உச்ச நீதிமன்றம் கருத வேண்டுமெனவும் சட்டத்தரணி வலியுறுத்தியிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம், முன்னாள் கடற்படைத் தளபதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது ஆட்சேபனைகளை எவ்வித தடையும் இன்றி முன்வைக்க அனுமதித்ததோடு, முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பித்ததோடடு, அது இறுதி உத்தரவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏகமனதாக தீர்ப்பை அறிவித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, மனுதாரரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா அளித்த சமர்ப்பிப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

எனினும் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவசரமாக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக, குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட தமது பிள்ளைகளை கடத்தி கொலை செய்தமைத் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதனை மூடிமறைக்க முயன்றதாக அவர்கள் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதியான கரன்னாகொட சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என்ற உத்தரவை பெற்றுள்ளார்.

இந்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டத்தின் நிர்வாக பணிப்பாளர், யஸ்மின் சூகா, ‘முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கைக் கடற்படை’ என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வழக்கில் திருகோணமலை கடற்படை புலனாய்வுப் பிரிவின் கட்டளைப்பீட பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட மூத்த கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும், பதவியுயர்வும் வழங்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

Facebook Comments