பொலிஸை ஒழுங்குபடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து அழைப்பு

0
Ivory Agency Sri Lanka

கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராகவும், ஆசிரியர்-ஆசிரியர் ஊதிய சமத்துவமின்மையை வலியுறுத்தியும் போராடும் ஆர்வலர்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாக குற்றம் சாட்டியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொலிஸாரை ஒழுங்குபடுத்த முழு நாடும் தலையிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

நாகரிக மற்றும் ஜனநாயக சமூகத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை கொண்டுள்ள பொலிஸார், அரசாங்கத்தின் அடக்குமுறை இயந்திரமாக பயன்படுத்தப்படுவதாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் ‘ஆளும் குழுவின் தனியார் கூலிப்படையாக’ செயற்படும் இலங்கை பொலிஸை ஒழுங்குபடுத்துவதில் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தலையிட வேண்டும் என கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் ரொஹான் லக்சிரி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கைதுகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அண்மைய அறிக்கைகளுக்கு மத்தியில், மே மாதத்தில் ஸ்கொட்லாந்து பொலிஸாரின் பயிற்சியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து ஐக்கிய இராச்சிய உதவிகளும் எங்கள் மதிப்பீடுகளுக்கு ஏற்பவே வழங்கப்படுவதாகவும், வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உதவி பற்றிய வலுவான மதிப்பீட்டிற்குப் பின்னர், எங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, என ஸ்காட்லாந்து காவல்துறை தலைவர் கெரி ரிட்சி பிரித்தானிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 3 ஆம் திகதி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்துடன், கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போராட்ட ஊர்வலத்தில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் கலந்து கொண்டதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

பேரணியின் நிறைவில், சவப்பெட்டி மாதிரி ஒன்று எரியூட்டப்பட்டதோடு, பல வீதித் தடைகளை தகர்க்கப்பட்டதாகவும், இந்த விடயத்தை பயங்கரவாதத்தின் கொடூரமான செயலாக வரையறை செய்த இலங்கை பொலிஸார், தமது சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் மஹிம் மெண்டிஸ் உட்பட 15 ஆர்வலர்கள் வேட்டையாடுவதாக பேராசிரியர் ரொஹான் லக்சிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவதாகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, பொலிஸார் மிகவும் விரும்பத்தகாத-கூலிப்படை பாத்திரத்தில் செயற்படுகின்றனர். இந்த அடித்தளத்தை ஒரு தீவிர முரண்பாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துள்ளது.”

அரசாங்க அரசியல்வாதிகளின் விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் மக்கள் ஒன்று கூடுகையில், பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற பொதுத் துறைகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பயணம் செய்யும் நேரத்தில், கண்களை மூடிக்கொண்டிருந்த பொலிஸார், பொது நலனுக்காக மிகவும் கடினமான சூழ்நிலையில் நடத்தப்படும் போராட்டங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டங்களை வலுவாக அமுல்படுத்துவதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

”மத்திய வங்கி கொள்ளை உள்ளிட்ட அரச சொத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட எவரும் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், சில வீதித் தடைகள் கீழே விழுந்ததை காரணம் காட்டி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக குற்றஞ்சாட்டி ஆர்வலர்களை சிறையில் அடைக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு பொது போராட்டத்தின் போது அடிக்கடி நிகழும் சிறு சிறு சம்பவங்களை பெரிதாக்கும் விடயங்களை நாம் கண்டிக்கின்றோம்”

தற்போதைய அரசின் தனிப்பட்ட தேவைகளுக்காக இலங்கை பொலிஸ் செயற்படுகிறது. பொது பாதுகாப்பை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாகரீக நெறிமுறை நிறுவனமாக பொலிஸை மாற்றுவதற்கு, ஒன்றிணையுமாறு இலங்கை மக்கள், சட்ட சமூகங்களின் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் வலையமைப்பு, மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கொத்தலாவல சட்டத்தை மீளப் பெறுவதோடு, ஆசிரியர்-அதிபர் நெருக்கடியை தீர்ப்தற்கு பதிலாக அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட நியாயமான போராட்டங்களை அடக்குவது, அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கும் என கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், இலவசக் கல்வி, அரச பல்கலைக்கழகங்களின் இருப்பிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை கொண்டுவரும் அரசின் முயற்சிக்கு எதிராக சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து பாடாசலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாள்கள் மற்றும் மாணவர்களின் பொறுப்பான தலையீடுகளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பெரிதும் பாராட்டியுள்ளது.

Facebook Comments