இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸை வழங்குவதா இல்லையா ஐரோப்பிய குழு நாட்டை வந்தடைந்தது

0
Ivory Agency Sri Lanka

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுவது உட்பட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைப் பதிவுகள், ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதிக்கு மேலும் வரிச் சலுகையை அளிக்க இயலுமா? என்பதை ஆராய உயர் மட்ட ஐந்து பேர் கொண்ட குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

விசாரணைகள் இன்று இன்று ஆரம்பமாகும் நிலையில், 5 பில்லியன் டொலர் ஆடைத் தொழிலுக்கான இலங்கையின் மிகப்பெரிய சந்தையான ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து சலுகை வர்த்தக அணுகல் கிடைக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதால் ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இரத்து செய்யும் யோசனை உள்ளடங்கிய தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த சிரேஷ்ட ஆலோசகர் நிகோலஸ் ஜைமிஸ், ஐரோப்பிய வெளிவிவகார சேவை தெற்காசிய பிரிவு தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபொலோஸ், ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி வர்த்தக விருப்பத்தெரிவுகள் ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஒன்றிய வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரிவுத் தலைவர் லூயிஸ் ப்ராட்ஸ், ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் அலுவலக அதிகாரி மோனிகா பைலெயிட் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவை மனித உரிமைகள் கொள்கை அதிகாரி பவுலோ சல்வியா ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஒக்டோபர் 5ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து அரசு, தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.

”ஸ்ரீலங்கா இணக்கம் வெளியிட்ட மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜிஎஸ்பி பிளஸ் குறித்த 27 சர்வதேச சாசனங்களை ஸ்ரீலங்கா எவ்வாறு இணங்குகிறது என்பதை தீர்மானிப்பதே கண்காணிப்பின் நோக்கமாகும்.” என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் துணைத் தூதுவர் தோர்ஸ்டன் பார்க்ப்ரடா ரொய்டர்ஸ் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், ஸ்ரீலங்கா 2.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள 45% ஆடைகளை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றுமதி செய்தது, இது கடந்த ஆண்டு 2.2 பில்லியன் டொலராக அமைந்தது.

நாட்டின் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி ஈட்டும் தொழிற்துறையான ஆடை ஏற்றுமதியாளர்களின், சுமார் 60% ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஆடை ஏற்றுமதியைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் பயனாளிகள் 9.5% செலவு நன்மைகள்.

தொற்றுநோய்களின் போது மூடப்பட்டு விற்பனை குறைந்து வருவதால் ஆடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், 2026ற்குள் 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை எட்டுவதற்கும் ஜிஎஸ்பி பிளஸ் ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக அமைந்துள்ளதோடு, இது தற்போதைய நிலையை விட 60% வளர்ச்சி விகிதம் நிலையாக கருதப்படுகிறது.

ஜிஎஸ்பி பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.

ஸ்ரீலங்கா ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழந்தால், ஆடைத் தொழில் ஒரு வருடத்திற்குள் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்கும் அபாயம் காணப்படுவதாக கூட்டு ஆடை சங்கங்கள் மன்றத்தின் (JAAF) பொதுச் செயலாளர் டுலி குரே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தனது முன்னுரிமை வரிச்சலுகையை இழந்தால் தொழிற்சாலை மூடப்படும் என்ற அச்சமும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களிடையே, 350,000 நேரடி மற்றும் 700,000 துணை தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, அவர்களில் 80 வீதமானவர்கள் கிராமப்புற பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த வர்த்தக ஒப்பந்தம் நாம் சந்தையில் இருப்பதற்கும், போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும், எங்கள் வர்த்தக கூட்டாண்மையை அதிகரிப்பதற்கும் அவசியம். இது தொடரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் அது இல்லாமல், இந்தத் துறையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகங்கள் இருக்கும், ” என கூட்டு ஆடை சங்கங்கள் மன்றத்தின் (JAAF) தலைவர் ஏ.சுகுமாரன் ரொய்டர்ஸிடம் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான ஆடை, மீன், இறப்பர் மற்றும் மட்பாண்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகைகளிலிருந்து நேரடியாகப் பயனடைகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதிக்கு சாதகமற்ற சூழல் ஏற்பட்டால், ஜிஎஸ்பி பிளஸ் மாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதி சந்தைகளையும் இழக்க நேரிடும் என ஜிஎஸ்பி பிளஸை இழக்கும் அபாயம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஸ்ரீலங்கா தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் அண்மையில் எச்சரித்திருந்தார்.

ஸ்ரீலங்காவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (FCCISL) மற்றும் கொழும்பு வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ”ஜிஎஸ்பி பிளஸ் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்” குறித்த இணையவழி அமர்வில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை மீளப் பெற்றால் அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென, சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதுமே தொழிற்சங்கங்களின் பணி எளவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முதன்முதலில் 2005 இல் ஜிஎஸ்பி பிளஸ் அணுகலைப் பெற்றது.

முன்னுரிமை வரி நிவாரணம் (ஜிஎஸ்பி பிளஸ்) பெப்ரவரி 2010 இல் இடைநிறுத்தப்பட்டது. மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான (ஜிஎஸ்பி பிளஸ்) இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்

கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தியது.

மேலும், ஊடக அடக்குமுறை, சட்டத்தின் ஆட்சி இல்லாமை, காணாமல் போதல், கைது, குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுதல், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட ஸ்ரீலங்காவில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

ஸ்ரீலங்கா இணக்கம் வெளியிட்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள் பரிசீலனை செய்யப்படும் இந்த ஆண்டு நவம்பரில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) பரிசீலனை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments