மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வழங்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவின் தற்போதைய சூழ்நிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதோடு, குறித்த குழு, அரச உயர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து சந்தித்து வருகின்றது.
இந்தநிலையில், குறித்த குழு, சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக நீதி அமைச்சு நேற்று முன்தினம் (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் செப்டெம்பர் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சந்தித்ததாக, நீதி அமைச்சின் ஊடக செயலாளர் சமில விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையில் தற்போதைய சட்ட சீர்திருத்தம், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடு அத்துடன் நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அரசியமைப்பு சீர்திருத்தம் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய விடயங்கள் குறித்த நேர்மறையான தன்மை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதோடு, தற்போதைய நிலை குறித்து அவர்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சாத்தியமான அனைத்து நிவாரணங்கள் தொடர்பிலும் பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட மனித விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் காரணமாக வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்கள் விற்பனைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் நன்மையை இலங்கை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
எனினும், நீதி அமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எவ்வித கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2021 ஜூன் 10, வியாழக்கிழமை ஸ்ரீலங்கா தீங்கு விளைவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் குறித்து விசேட வனம் செலுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா இணக்கம் வெளியிட்ட, மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இடைநிறுத்துமாறு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த சிரேஷ்ட ஆலோசகர் நிகோலஸ் ஜைமிஸ், ஐரோப்பிய வெளிவிவகார சேவை தெற்காசிய பிரிவு தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபொலோஸ், ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி வர்த்தக விருப்பத்தெரிவுகள் ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஒன்றிய வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரிவுத் தலைவர் லூயிஸ் ப்ராட்ஸ், ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் அலுவலக அதிகாரி மோனிகா பைலெயிட் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவை மனித உரிமைகள் கொள்கை அதிகாரி பவுலோ சல்வியா ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.