ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு கட்டணச் சலுகைகளை தொடர்ந்து வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் உள்ள நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைப் பற்றி ஆராயுமாறு, தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு அமைப்பு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள ஊழியர்கள் நேரடியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அவகாசம் தருமாறு ஸ்டாண்ட் அப் அசோசியேஷனின் நிர்வாக பணிப்பாளர் அஷிலா தந்தெனிய, கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் முதலீட்டு சபையின் கீழ் பதினைந்து முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்கள் செயல்படுகின்றன, அவை மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பயன்படுத்துகின்றன.
இதன் காரணமாக இலங்கை தனது வருடாந்த ஏற்றுமதி வருவாயில் 14 வீதத்தை இத்துறையின் ஊடாக ஈட்டுகின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள, தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், இலங்கை முதலீட்டு வலையச் சட்டம் மற்றும் தொழிலாளர்கள் பணிநீக்கம் சட்டம் போன்ற பல உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஐ.நா வழிகாட்டுதல்கள், கொள்கைகள் மற்றும் சர்வதேச மாநாடுகள் தொழிலாளர்களின் பல உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சாலை உரிமையாளர்கள் அவற்றை புறக்கணிப்பதாக அஷிலா சுட்டிக்காட்டியுள்ளார்.
“இதேபோல், இலங்கை அரசும் முதலீட்டு சபையும் முதலீட்டு வலையங்களில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை.”
கடந்த வருட இறுதியில் இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்வதன் மூலம் பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொழிற்சாலை உரிமையாளர்களின் அழுத்தம் காரணமாக இதுவரை வெளியாகவில்லை அஷிலா தந்தெனிய ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளார்.
“இதனால், பல தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை விட சக்திவாய்ந்தவர்களாக மாறியுள்ளனர், இதனால் அதிக இலாபத்திற்காக தொழிலாளர்களின் உரிமைகளை புறக்கணிக்க முடிகிறது.”
”கோவிட் 19 இன் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் சேவையை அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் சேர்ப்பது இந்த ஊழியர்களை வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தியது, ஆனால் அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள பிற துறைகளுக்கு வழங்கப்படும் நன்மைகள் பலவற்றை அவர்கள் பெறாத அதேவேளை, அவர்கள் பல சிரமங்களுடன் பணியாற்ற வேண்டியிருந்தது.” என அஷிலா குறிப்பிட்டுள்ளார்.
“கோவிட் 19 பரவுவதைத் தடுக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய, சுமார் 50,000 தொழிலாளர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”
வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் அவலநிலையையும் அவர் தனது கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் சாதாரண அடிப்படையில் தொழிற்சாலை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் தொழில் பாதுகாப்பு இல்லாமை குறித்து அஷிலா ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
வாழ்க்கைச் செலவுகளுக்கு தகுந்த ஊதியம் இல்லாதது மற்றும் கர்ப்பிணித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட, இலங்கை அரச தொடர்ந்து மனித உரிமை விடயங்களை தொடர்ந்து செய்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கான வரிச்சலுகையை வழங்குவத குறித்து மனித உரிமைகள் நடத்தையை விசாரணை செய்ய, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்ததோடு, தற்போது விசாரணையை நடத்தி வருகின்றது.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மறுபரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யும், மேலும் சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு உட்பட சர்வதேச மனித உரிமை கடமைகளை செயற்படுத்துவதையும் இது மதிப்பீடு செய்யும்.