காவல்துறை மற்றும் கடற்படைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல்களுக்கு இடையூறு மற்றும் மன்னாரில் தாக்குதல் இடம்பெற்றமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூன்று பேரை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறைக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் எனப்படும் ராசையா பார்திபனுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற, கஜேந்திரன் உட்பட 3 பேரை நல்லூர் திலீபன் நினைவிடம் அருகே யாழ்ப்பாண காவல்துறை கடந்த 29ஆம் திகதி கைது செய்தது.
திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காவல்துறையினர் இதனை தடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் ஏனையவர்களும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவை காட்டுமாறு கோரிய போதிலும், காவல்துறையால் அதை செய்ய முடியவில்லை.
இந்த சம்பவத்தை படம்பிடித்த இரண்டு யாழ்ப்பாண ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். அவர்களின் கைத்தொலைபேசிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினம் மாலை காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு பேரை கைது செய்வதற்கான விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. கைது உத்தரவுகள் இருந்ததா, கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த ரசீது வழங்கப்பட்டதா. கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் அல்லது பிற பொருட்கள் பற்றிய விரிவான அறிக்கை மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையின் உள்ளடக்கங்கள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க யாழ்ப்பாண காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய ஒருங்கிணைப்பாளர் டி.கனகராஜ் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
வங்காலைப்பாடு மீனவர்கள் மீது தாக்குதல்
மன்னார் பேசாலை வங்காலைப்பாடு கிராமத்தின் மீன்வள தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24ஆம் திகதி கடல் வேலை முடிந்து வீடு திரும்பும் போது கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முதல் கட்டமாக பேசாலை காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் முழு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய ஒருங்கிணைப்பாளர் டி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சிவில் உடையில் இருந்த கடற்படை அதிகாரிகள், மீனவரைத் தாக்கியதை அவரது மகனான கிராம சேவகர் கண்டுள்ளார். இதன்போது அங்கு வந்த மேலும் எட்டு கடற்படை உறுப்பினர்கள் பிரதேசத்தில் மேலும் பலரை தாக்கியுள்ளனர்.
இரு கடற்படை வீரர்களும் சென்று மேலும் எட்டு கடற்படை உறுப்பினர்களை அழைத்து வந்து மீனவர்கள் மற்றும் கிராம சேவகரை தாக்கியுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.