வர்த்தக வலய ஊழியர்கள் எரிபொருள் நிவாரணம் கோருகின்றனர்

0
Ivory Agency Sri Lanka

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

“நாடு தழுவிய எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களில், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் ஆடைத் துறையில் பணிபுரியும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், ” என சுதந்திர வர்த்தக வலய பெண்களுக்காக பணியாற்றும் மனித வளர்ச்சிக்கான புரட்சிகர இருப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்வுக்கு அந்தக் குழுவின் தலைவர் சந்திரா தேவநாராயண கடிதம் எழுதியுள்ளார்.

வார நாட்களில் வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகளுக்கு ஏற்ப காலை முதல் இரவு வரை பணிபுரிவதால் வரிசையில் காத்திருக்கவோ, டிக்கெட் பெறவோ நேரமில்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.

“எரிவாயு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எரிவாயு விநியோக முறையை ஞாயிற்றுக்கிழமைகளில் உருவாக்குங்கள். மேலும், தற்போதுள்ள 20 எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக விநியோகஸ்தர்களுக்கு மேலதிக சிலிண்டர்களை வழங்குங்கள் ”என சந்திர தேவநாராயண நிதியமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிகக் குறைந்த ஊதியத்தில் சிறிய தங்குமிடங்களில் வசிக்கும் இந்த வர்த்தக வலய தொழிலாளர்கள், இப்போது தங்கள் பெரும்பாலான நேரத்தை உணவின்றி செலவிடுகின்றனர்.

எரிவாயு, மண்ணெண்ணெய் நெருக்கடியால் உணவு, குடிபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பொதி சாப்பாடு கிடைப்பது கூட சிரமமாக காணப்படுகின்றது. எப்போதாவது சிரமப்பட்டுக் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொதியின் விலை 250 ரூபாய்க்கு மேல். வர்த்தக வலயத் தொழிலாளர்கள் இந்த தொகையை அன்றாடம் செலவிடுவது சிரமம், என நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments