கொழும்பில் இருந்து வரும் ஆளில்லா கமராக்களால் புலம்பெயரும் பறவைகள் ஆபத்தில்

0
Ivory Agency Sri Lanka

மன்னாரில் உள்ள அதிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள், பறவைகளை ஆய்வு செய்ய ஆளில்லா கமராக்களை பயன்படுத்துவதால் அழகிய பறவை இனங்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பாத அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் குழு எச்சரித்துள்ளது.

தலைநகரில் இருந்து பறவை கண்காணிப்பாளர்கள் என அழைக்கப்படுபவர்கள் மன்னாருக்கு ஆளில்லா கமராக்களை கொண்டு வருவதை அறிந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், இந்த தனித்துவமான, அரிய மற்றும் அழகான பறவை இனங்கள் இந்த தனித்துவமான இடத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதும் அவற்றின் எதிர்கால வருகையும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பல பறவைகள் புலம்பெயர் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக மன்னார் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்வதோடு, இவற்றில் பிளமிங்கோக்கள் மிக முக்கியமானவையாகும்.

புலம்பெயர் பறவைகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உப்பு நீர் கடல்வாழ் உயிரினங்களை நம்பியிருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் பல பறவை இனங்கள் இப்பகுதிக்கு வருகைத் தருவதோடு, ஒவ்வொரு வருடமும் புதிய இனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இது உள்ளூர் பறவையியல் நிபுணர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாட்டிலிருந்து முக்கிய அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் வெளிநாட்டு பறவையியல் நிபுணர்களுக்கும் இது அற்புதமான இடமாகும்.

இப்பகுதி உயர் பாதுகாப்பு வலையமாக கருதப்படுவதோடு, ரேடாரில் சிக்காமல் இருக்க ஆளில்லா கமராக்களை கீழே பறக்க விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை தாம் அறிந்து கொண்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது.

ஆளில்லா கமராக்கள் உணவும் தேடும் பறவைகளுக்கு அதிக தொல்லை தருவதாக வலியுறுத்தியுள்ள அந்த சங்கம்,
ஆளில்லா கமராக்கள் எழுப்பும் அதிக சத்தத்தாலும், உணவுத் தேடும் பறவைகளை ஒத்த அவற்றின் வடிவத்தாலும், அவை பறவை இனங்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலைமையால், பறவை இனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால், அவை மீளத்திரும்பாது எனவும், கொழும்பில் உள்ள சிலருக்கு சலுகைகளை அனுமதித்தமைக்காக முழு நாடும் விலை கொடுக்க நேரிடலாம் எனவும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் எச்சரித்துள்ளது.

“இந்த அழிவுகரமான செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நல்ல மனம்படைத்த ஆளில்லா கமராக்களை இயக்குபவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

புலம்பெயர் பறவைகள் மனித செயல்பாடுகள் காரணமாக எப்படி தங்கள் முந்தைய வாழ்விடத்தை விட்டு வெளியேறின என்பதை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் நினைவுபடுத்தியுள்ளது.

“லுணுகம்வெஹெரவில் இருந்து பூந்தல தேசிய பூங்காவிற்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டதன் மூலம், பூங்காவில் உள்ள மிகவும் பிரபலமான பறவைக் கூட்டங்கள் நீர் குறைப்பு அல்லது நீர்த்துப்போதல் காரணமாக வடக்கே இடம்பெயர்ந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பறவைகள், வடக்கே நகரும், பின்னர் தீவை விட்டு வெளியேறும், ”என வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.

Facebook Comments