மத்திய வங்கியுடனான அவசர சந்திப்பின் பின் பிரதான எதிர்க்கட்சி அதிருப்தி

0
Ivory Agency Sri Lanka

நெருக்கடியை சமாளிப்பது குறித்து இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு சென்ற பிரதான எதிர்க்கட்சியின் பொருளாதார நிபுணர்கள் குழு அதிருப்தியுடன் திரும்பியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய ஜனாதிபதி பொருளாதார சபையொன்றை நியமித்த மறுநாளே, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவின் உயர்மட்ட குழு, கடந்த வாரம் நிதியமைச்சரிடம் உடனடியாக பரிசீலிக்கக் கோரி அனுப்பப்பட்ட எட்டு அம்சப் பிரேரணை தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை “ஒரு பாரிய நிர்வாகச் சிதைவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான கபீர் ஹாசிம் மற்றும் கலாநிதி எரான் விக்ரமரத்ன ஆகியோருடனான கலந்துரையாடல் “நட்புறவானதாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது” என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வர்ணித்துள்ளதுடன், கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் தயக்கமின்றி தமது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் “நட்புத்தன்மையை” உறுதிப்படுத்திய கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இறக்குமதிக்கு பணம் செலுத்தும் திறன், வெளிநாட்டு கடன், மாற்று விகிதம், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கடன் நெருக்கடிக்கு பின்னரான நிதி நிலைமை போன்ற விடயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதை நாங்கள் காணவில்லை. ஜூலை மாதம் 1 பில்லியன் டொலர் பிணைமுறிகள் குறித்து பேசப்பட்டது. பசில் ராஜபக்சவுக்கு எட்டு அம்சப் பிரேரணை அனுப்பி வைக்கப்பட்டமை குறித்து பேசப்பட்டது. வெளிப்படையாக, இலங்கையின் கடன் நெருக்கடி தொடரும். ஆட்சியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இலங்கையின் கடன் சுமையிலிருந்து விடுபட தொடர்ச்சியான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளதோடு, இது தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளது.

மூன்று நாட்களுக்குப் பின்னர், டொலர்களை ஈர்க்கும் முயற்சியில் மத்திய வங்கி ரூபாயை மிதக்க அனுமதித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க செயற்பட மத்திய வங்கியை வற்புறுத்துவதே வளமான பொருளாதார கொள்கை வகுப்பாளர்களின் நோக்கமாகும்.

“இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கான கடன் தகுதி மற்றும் திட்டங்களை விரைவாக பகுப்பாய்வு செய்ய நாங்கள் முன்மொழிந்தோம். சர்வதேச நாணய நிதியத்தில் சேர பரிந்துரைத்தோம். தொற்றுநோயின் முடிவின் அதிர்ச்சியை எவ்வாறு சமாளிப்பது என்பதை வங்கிகளும் வணிகங்களும் தீவிரமாகக் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைத்தோம். சில உதவிகளைப் பெறுவதை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்,”என ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய கடன்களை மறுசீரமைக்க தொடர்ச்சியாக மறுத்து வரும் இலங்கை மத்திய வங்கி, எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

Facebook Comments